Home உலகம் “முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்!

“முரசு அஞ்சல் மென்பொருள்” கொண்டு நூலகங்களில் தமிழ் நூல்களை இனி தமிழிலேயே தேடலாம்!

1952
0
SHARE
Ad
முரசு அஞ்சல் மென்பொருள் மூலம் நூல்களைத் தேடுவது எப்படி என விளக்கும் அழகிய பாண்டியன்

சிங்கப்பூர் – மலேசியாவைச் சேர்ந்த கணினி நிபுணர் முத்து நெடுமாறனின் வடிவமைப்பிலும், கைவண்ணத்திலும் உருவான முரசு அஞ்சல் மென்பொருள் மற்றும் செல்லினம் எனப்படும் விவேகக் கைத்தொலைபேசிகளுக்கான உள்ளிடும் குறுஞ்செயலி ஆகியவை உலகம் எங்கும் இலட்சக்கணக்கானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிங்கப்பூரிலும் முரசு அஞ்சல் அந்நாட்டுக் கல்வி அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டு அந்த அமைச்சின் அதிகாரபூர்வ தமிழ் மென்பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது சிங்கையின் தேசிய நூலகமும் முரசு அஞ்சல் மென்பொருளைப் பயன்படுத்தி ஒரு முக்கியமான, பயனான சேவையை நூலகப் பயனர்களுக்கு வழங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

பொதுவாக சிங்கையின் தேசிய நூலகங்களுக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருக்கும் தமிழ் நூல்களைத் தேடுபவர்கள் நூலின் பெயரையோ, எழுத்தாளரின் பெயரையோ அங்குள்ள கணினிகளில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்துதான் தேட வேண்டியதிருந்தது. அவ்வாறான தேடுதல்களுக்கு கிடைக்கும் பதில்கள் 100 விழுக்காடு சரியாக இருந்ததில்லை. அதோடு, நூலின் பெயர்களும் கணினித் திரையில் ஆங்கிலத்திலேயே தோன்றும்.

ஆனால், இனி முரசு அஞ்சல் மென்பொருளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் தேடுதல் இயந்திரத்தின் வழி தமிழிலேயே தட்டச்சு செய்து தேடும் வசதியை சிங்கை தேசிய நூலகம் உருவாக்கியுள்ளது. பயனர்களுக்கு தமிழில் தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. தேடுதல் இயந்திரத்தில் மொழித் தேர்வை, தமிழ் எனத் தேர்ந்தெடுத்து நூலின் பெயரையோ, நூலாசிரியரின் பெயரையோ ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால்கூட திரையில் தமிழிலேயே நூல்களின் பெயர்கள் காட்சியளிக்கும்.

உதாரணத்திற்கு, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய நூல்களைத் தேடும் ஒருவர், இதற்குமுன் Jeyamohan, Jeyamogan, Jayamohan, Jayamogan என பலவாறு தட்டச்சு செய்வார். திரையிலும் அது ஆங்கிலத்திலேயே தெரியும். ஆனால், அவரது பெயர் ஆங்கிலத்தில் எவ்வாறு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து உங்களின் தேடல் தோல்வியில் முடியலாம், அல்லது அவரது எல்லா நூல்களும் தேடலில் கிடைக்காமல் போகலா​ம்.

ஆனால் இப்போது முரசு அஞ்சல் மென்​பொருளைச் சுட்டிவிட்டு நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது அதற்கு இணையான “ஜெயமோகன்” என்ற சொல் திரையில் தமிழிலேயே தெரியும். அவ்வாறு தேடும்போது ஜெயமோகனின் அனைத்து நூல்களும் தேடல் முடிவுகளாக வெளிவரும். உங்களுக்கு விருப்பமானதை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.

தமிழ் நூல்கள் அதிகம் இரவல் வாங்கப்படவேண்டும், நிறைய அளவில் பயனர்களால் படிக்கப்பட வேண்டும் என்ற தங்களின் தொடர் முயற்சியின் இன்னொரு வெளிப்பாடுதான் இந்த முரசு அஞ்சல் மென்பொருள் மூலமான தேடுதலை எளிமையாக்கும் ஏற்பாடு என்கிறார் சிங்கை தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகளுக்கான தலைவர் அழகிய பாண்டியன்.

தற்போது சிங்கை தேசிய நூலகத்தின் அனைத்து தேடல் இயந்திரங்களிலும் முரசு அஞ்சல் தமிழ் மென்பொருள் பொருத்தப்பட்டு, நூல்களைத் தேடும் முயற்சிகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

செய்தி அடிப்படை – நன்றி – மீடியா கோர்ப் செய்தி (சிங்கப்பூர்)

இந்த செய்தியின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்;

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/tamil-search-box-in-sg-library/4292150.html