கிள்ளான் – கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழா கடந்த 35 ஆண்டுகளாக இனிதே நடைபெற்று வருகின்றது. அவ்வகையில் இவ்வாண்டு தமிழ் விழா கடந்த 8 ஜூன் தொடங்கியது.
இந்த விழா 13 ஆகஸ்ட் 2019 வரையில் சிறப்பாக நடைபெறவுள்ளது. பரதநாட்டியப் போட்டி, ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள், கலை இரவு என பல்வேறு நிகழ்வுகள் தமிழ் விழாவில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் விழாவின் முத்தாய்ப்பு அங்கமாய் ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் கடந்த 15 ஜூன் 2019 (சனிக்கிழமை), கிள்ளான் ஸ்ரீ அண்டலாஸ் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
மலாய் மற்றும் தமிழ்மொழி கட்டுரைப் போட்டி, வர்ணம் தீட்டும் போட்டி, மலாய் மற்றும் தமிழ்மொழி பேச்சுப்போட்டி, ஆங்கில மொழி கதைச் சொல்லும் போட்டி, கவிதைப் போட்டி, திருக்குறள் மனனம், திருக்குறள் எழுதுதல் என பல போட்டிகள் நடைபெற்றன.
சிலாங்கூர் மாநில நிலையில் நடைபெற்ற ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் 20 தமிழ்ப்பள்ளிகளைச் சார்ந்த சுமார் 450 மாணவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர்.
மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி, மதிய உணவு வழங்கப்பட்டு கேளிக்கை விளையாட்டுகளும் நடத்தப்பட்டன. காலை 9 முதல் மதியம் 2.30 வரை போட்டிகள் சீராக நடைபெற்றன.
மாலை 3 மணியளவில் பரிசளிப்பு நிகழ்வு நடைப்பெற்றது. வரவேற்புரை நிகழ்த்திய கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கப் பொருளாளர் ப.தர்மராஜ், தனதுரையில் தமிழ் விழாவின் ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். 18 முதல் 35 வயதிலான தன்னார்வ இளைஞர்களைக் கொண்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். போட்டிகளில் பங்கேற்க மாணவர்களை அழைத்து வந்த அனைத்து தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தமது நன்றிகளை அவர் தெரிவித்துக் கொண்டார்.
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை மேற்கொண்ட சிறப்புரை ஆற்றினார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்ட அவர், மாணவர்கள் போட்டிகளில் பங்கெடுப்பதன் முக்கியத்துவத்தை விளக்கி கூறினார். தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகளையும் எடுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் நளன், சக்தி உணவகத்தைப் பிரதிநிதித்து திலகன், சிலாங்கூர் டிஸ்லெக்சியா இயக்கத்தைப் பிரதிநிதித்து டாக்டர் உமாராணி, கோலக்கிள்ளான் சைவ சமய மன்றத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி என பல பிரமுகர்களும் இப்பரிசளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி அனைத்து போட்டிகளிலும் பல வெற்றிகளைப் பதிவு செய்து தமிழ் விழா ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளின் சுழற்கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.
இவ்வேளையில் இப்போட்டி நடைபெற அனைத்து வகையிலும் உதவி புரிந்த அனைத்து நல்நெஞ்சங்களுக்கும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தினர் தங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.