ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில இந்தியர்களின் நலன்கள் தற்காக்கப்படவில்லை என்றும், அவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்றும் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் செய்திகளை மறுத்திருக்கும் ஜோகூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டாக்டர் எஸ்.இராமகிருஷ்ணன் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்களை விரிவாகப் பட்டியலிட்டிருக்கிறார்.
பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப் பள்ளி பிரச்சனை
27 மே 2019 தேதியிட்ட அறிக்கை ஒன்றின் வழி பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப் பள்ளியின் கட்டுமானம் 95 விழுக்காடு பூர்த்தியாகிவிட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்திருக்கிறது. எஞ்சிய பணிகளையும் முடித்து எதிர்வரும் டிசம்பர் 2019-இல் இந்தப் பள்ளி செயல்படும் வண்ணம் கட்டி முடிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.
ஒரு பள்ளியைக் கட்டி முடித்து ஒப்படைக்கும் முன்னர் அந்தப் பள்ளியில் திட்டமிடப்பட்ட அனைத்து வசதிகளையும் அந்தப் பள்ளி கொண்டிருக்கிறதா, மாணவர்களின் கற்றல் பணிகளுக்கு ஏற்ற வகையில் இருக்கிறதா, மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் போன்ற பலவற்றையும் உறுதி செய்த பின்னரே அந்தப் பள்ளியை கல்வி அமைச்சு ஒப்படைக்கும்.
“நானும் இந்தியர் நலன்களுக்கான சிறப்பு அதிகாரியும் ஜோகூர் மாநிலக் கல்வி இலாகாவுடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றையும் இதுகுறித்து நடத்தியுள்ளோம்” என்றும் இராமகிருஷ்ணன் கூறினார்.
லாடாங் நியோர் தமிழ்ப் பள்ளி
தற்போது கட்டட தகுதிச் சான்றிதழைப் பெறுவதற்கான நடைமுறைகளைச் செய்துவரும் லாடாங் நியோர் தமிழ்ப் பள்ளி எதிர்வரும் செப்டம்பர் 2019-இல் முழுமையாக முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018 அக்டோபர் மாதம் வரை கல்வி அமைச்சு 5 இலட்சம் ரிங்கிட் தொகையை இந்தப் பள்ளியின் கட்டுமானத்திற்காக வழங்கியுள்ளது.
“கல்வி தொடர்பிலான பணிகளை நிறைவேற்றுவதில் நம்பிக்கைக் கூட்டணி அரசு எந்த அளவுக்கு பாடுபட்டு வருகிறது என்பதையே இது காட்டுகிறது. மேலும் இதன் தொடர்பில் நானும் மாநில அரசாங்கச் செயலாளரைச் சந்தித்து கட்டடத்திற்கான நற்சான்றிதழைப் பெறும் நடவடிக்கையைத் துரிதப்படுத்தி வருகிறேன்” என்றும் இராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் தெரிவித்தார்.
செனாய் வட்டாரத்தில் புதிய தமிழ்ப் பள்ளி
ஏர்போர்ட் சிட்டி வளாகத்தில் தமிழ்ப் பள்ளி ஒன்றை அமைக்கும் விண்ணப்பத்தை கூலாய் வட்டார அலுவலகம் 12 பிப்ரவரி 2018 தேதியிட்ட கடிதத்தின் வழி நிராகரித்தது. அதற்கு அந்த இலாகா கூறிய காரணம் தேசியப் பள்ளி ஒன்றை அமைப்பதுதான் தமிழ்ப் பள்ளி அமைப்பதைவிட அத்தியாவசியமாக இருக்கிறது என்பதாக இருந்தது.
சம்பந்தப்பட்ட அந்த நிலம் பள்ளி ஒன்றை நிர்மாணிப்பதற்காக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிலமாகும். “நானும் செனாய் சட்டமன்ற உறுப்பினரும் கடந்த மே 6-ஆம் தேதி கூலாய் மாவட்ட அதிகாரியைச் சந்தித்து தமிழ்ப் பள்ளிக்கான பொருத்தமான மாற்று நிலத்தை அடையாளம் கண்டு தருமாறு கேட்டிருக்கிறோம். தொடர்ந்து செனாய் சட்டமன்ற உறுப்பினரோடு இணைந்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட நிலம் எந்தவிதக் உட்கட்டமைப்பையும் கொண்டிருக்கவில்லை என்ற நிலையில் மாநில அரசாங்கம் பொருத்தமான மாற்று நிலத்தை அடையாளம் கண்டு, புதிய தமிழ்ப்பள்ளியை நிர்மாணிக்க கடப்பாடு கொண்டுள்ளது” எனவும் இராமகிருஷ்ணன் உறுதியளித்தார்.
செம்புரோங் தோட்டத் தமிழ்ப் பள்ளியை இடம் மாற்றம் செய்யும் விவகாரம்
செம்புரோங் தோட்டத் தமிழ்ப் பள்ளி 20 ஆண்டுகளுக்கு முன்னரே குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளி என வகைப்படுத்தப்பட்டது. அந்தப் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி அந்தப் பள்ளியை இடம் மாற்றுவதற்கான பரிந்துரையை விவாதித்ததாகக் கூறும் இராமகிருஷ்ணன் கல்வி அமைச்சின் பார்வைக்கும் இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டிருப்பதாகக் கூறினார்.
மாநில அரசாங்கம் பள்ளியை இடம் மாற்றுவதற்கு பல்வேறு இடங்களை அடையாளம் கண்டு கல்வி அமைச்சுக்கு சமர்ப்பித்திருக்கிறது. அவற்றுள் கெம்பாஸ் வட்டாரம், தாமான் யூனிவர்சிடி மற்றும் செனாய் ஆகியவையும் அடங்கும் எனவும் இராமகிருஷ்ணன் விளக்கினார்.
துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப் பள்ளியை கட்டி முடிக்கும் விவகாரம்
நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்திற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குத்தகையாளர் முறையாகவும், குத்தகை விதிகளுக்கு ஏற்பவும் துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப் பள்ளியின் கட்டட நிர்மாணத்தைத் தொடராத காரணத்தால் அந்தக் குத்தகையாளருக்கு குத்தகை விதிகளை மீறியதற்காக எச்சரிக்கைக் கடிதங்கள் 8 மே மற்றும் 22 மே தேதிகளில் இந்த ஆண்டு அனுப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அந்தக் குத்தகையை இரத்து செய்யும் உத்தரவு மலேசியக் கல்வி அமைச்சின் சட்ட ஆலோசகரால் விரைவில் அனுப்பப்படும்.
“லாடாங் ஆயில் பாம் தமிழ்ப் பள்ளியின் விவகாரத்தையும் நான் கல்வி அமைச்சின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கிறேன். இதனை தீவிரமாகப் பரிசீலித்து வரும் கல்வி அமைச்சு கட்டடம் எதிர்வரும் டிசம்பரில் நிறைவு பெறும் அதற்கான கட்டடத் தகுதிச் சான்றிதழை விரைந்து பெற ஆவன செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது” என்ற இராமகிருஷ்ணன், கோத்தா திங்கி, தாஜோல் தமிழ்ப் பள்ளியின் கட்டுமானமும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
தஞ்சோங் லங்சாட் இந்து ஈமக் கிரியை இடம்
முந்தைய அரசாங்கத்தின் காலத்தில் இருந்தே சுமார் 10 ஆண்டுகளாக நீடித்து வருகிறது இந்தப் பிரச்சனை. முந்தைய அரசாங்கம் அடையாளம் காணப்பட்ட இடத்திற்கான நிதி ஒதுக்கீட்டைப் பெறவில்லை என்பதோடு, மாவட்ட அலுவலகமும் இந்து ஈமக் கிரியைகளுக்கான இடத்திற்கான நிர்மாணிப்பு திட்டங்களை அங்கீகரிக்காததால் இந்தத் திட்டமும் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. புதிய நிர்மாணிப்புத் திட்டம் – அதாவது பாசீர் கூடாங், தஞ்சோங் லங்சாட், சாராங் புவாயா என்ற இடத்திற்கு அருகில் இந்த ஈமக் கிரியைகளுக்கான இடம் அமைக்க தற்போது நில அலுவலகம் பரிந்துரைத்து அதற்கான அனுமதிகள் அடுத்தடுத்த கூட்டங்களில் பெறுவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.
இந்திய சமுதாயத்திற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு
ஜோகூர் மாநில அரசாங்கம் இந்திய சமூக மேம்பாட்டிற்காக 3 மில்லியன் ரிங்கிட் சிறப்பு ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை தமிழ்ப் பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், கல்வி மேம்பாட்டுக்காக பணியாற்றும் இயக்கங்கள், சமூக நல உதவிகள், வணிக முனைவர்களுக்குத் தேவைப்படும் தொழில் கருவிகள், சிறுதொழில் கடன்கள் ஆகியவற்றுக்கு இந்த நிதி பகிர்ந்தளிக்கப்படும்.
எனது தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டு, அந்தக் குழு இந்த நிதியின் பங்கீடுகளுக்கான அடைவுநிலையைக் கண்காணிக்கும்.
கூடிய விரைவில் இந்த நிதிக்கான பங்கீடுகள் உரியவர்களுக்கு வழங்கப்பட மாநில அரசாங்கம் தற்போது நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என்றும் இராமகிருஷ்ணன் தனது விரிவான அறிக்கையில் குறிப்பிட்டார்.
எனவே, மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் மூலம் ஜோகூர் மாநில அரசாங்கம் பல முனைகளிலும் இந்தியர்களின் நலன்களுக்காகப் போராடி வருகிறது என்பதையும், எந்த வகையிலும் இந்தியர்களின் நலன்கள் புறக்கணிக்கப்படவில்லை என்பதும் தெளிவாகத் தெரிய வரும் என்றும் இராமகிருஷ்ணன் கூறினார்.