Home நாடு “எங்கள் வெளிப்படைத்தன்மையை எங்கும் காணமுடியாது” இராமசாமிக்கு வேதமூர்த்தி பதில்

“எங்கள் வெளிப்படைத்தன்மையை எங்கும் காணமுடியாது” இராமசாமிக்கு வேதமூர்த்தி பதில்

867
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசிய இந்திய சமுதாயத்திற்கு நிதி அளிக்கப்படுவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்று பொது வெளியில் புகார் தெரிவிக்கும் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பா. இராமசாமி, தன்னிடம் நேரில் பேசி உண்மை நிலையை தெரிந்து கொள்ளலாம் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஜசெக-வைச் சேர்ந்தவரும் பிறைத் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இராமசாமி, 2019 நிதிநிலை அறிக்கை மூலம் இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட வெள்ளி 100 மில்லியன் நிதி என்னவாயிற்று என்று முன்னதாக வினவி இருந்தார்.

சுபாங் ஜெயாவில் பூர்வகுடி மக்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களை சந்தித்தபோது இதுகுறித்து பேசிய வேதமூர்த்தி, மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ரா மூலம் இந்திய சமுதாயத்திற்கு, குறிப்பாக வறுமை நிலைக்கு ஆளாகியுள்ள பிரிவினர் மாற்றம் காணவும் அவர்கள் மேம்பாடு எட்டவும் வழங்கப்பட்ட நிதி குறித்தும், இந்தியர்களுக்கான சமூக-பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பில் யார் யாருக்கு எவ்வளவு நிதி என்பது குறித்த முழு விவரமும் மித்ரா இணையப் பக்கத்தில் தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

இப்படிப்பட்ட வெளிப்படைத் தன்மையை வேறெங்கும் எந்த அமைச்சிலும் காண முடியாது. இதற்கு மேலும் எப்படி வெளிப்படைத் தன்மையாக இருப்பது என்று தெரியவில்லை.

உண்மை நிலை இவ்வாறிருக்க, இத்தனைக்கும் நாங்கள் இருவரும் ஒரே அரசாங்கத்தில் இருக்கின்றோம்; நான் அழைக்கும் போதெல்லாம் தொலைபேசியில் பேசுபவர், அப்படி இருந்தும் குறைகூறுகிறார் என்றால், அவருக்கு தகவல் இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என்று செய்தியாளர்களிடம் பேசியபோது தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான அவர் மேலும் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக் கூட்டணி இந்திய மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்திற்கு வேதமூர்த்தியும் அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் வர இயலாத நிலையில், துணை முதல்வர் இராமசாமி குற்றம் சுமத்தியிருந்தார்.

இதன் தொடர்பில் கருத்துரைத்த வேதமூர்த்தி, “இதற்கு முன் இதுபோன்ற கூட்டங்களில் நான் கலந்து கொண்டிருந்தாலும் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பதால் அதைப் பெரிதுபடுத்துகின்றனர். எது எவ்வாறாயினும், இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து மித்ரா தொடர்பான அனைத்து நடவடிக்கை குறித்தும் நம்பிக்கைக் கூட்டணி இந்திய மக்கள் பிரநிதிகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்” என்று நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான வேதமூர்த்தி தெரிவித்தார்.