Home One Line P1 சட்டவிரோத பணம், சொத்துகள் பறிமுதல், வங்கிக் கணக்குகள் முடக்கம்!

சட்டவிரோத பணம், சொத்துகள் பறிமுதல், வங்கிக் கணக்குகள் முடக்கம்!

799
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கிள்ளான் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கைச் சுற்றியுள்ள சட்டவிரோத பண சேவைகள் வணிகத்தை (எம்எஸ்பி) மேற்கொள்பவர்களுக்கு எதிரான சோதனைகளில் மொத்தமாக 4 மில்லியன் ரிங்கிட் பணம் மற்றும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கூடுதலாக 35 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும் மலேசிய தேசிய வங்கி (பேங்க் நெகாரா) ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி மலேசிய காவல் துறை மற்றும் மலேசிய குடிநுழைவுத் துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில், சட்ட விரோதமாக நடத்தப்பட்ட பண சேவை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பான ஆவணங்கள், கணினிகள் மற்றும் கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்த விசாரணைக்கு உதவ 14 நபர்கள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் என நம்பப்படும் 22 சட்டவிரோத குடியேறிகள்  1959/63 குடிநுழைவு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“2011-ஆம் ஆண்டுக்கான பண சேவைகள் வணிகச் சட்டம் (எம்எஸ்பிஏ) பிரிவு 4 (1) கீழ் உரிமம் இல்லாமல் எம்எஸ்பி நடவடிக்கைகளை மேற்கொண்டது மற்றும் பணமோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவது என சந்தேகிக்கப்படும் குற்றங்களுக்காக இந்த கும்பல் விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.  பணமோசடி தடுப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நிதி மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் சட்டம் 2001 (அம்லா) பிரிவு 4(1) கீழ் இது குற்றமாகும்” என்று அது குறிப்பிட்டுள்ளது.

எம்எஸ்பிஏ பிரிவு 4 (1) இன் கீழ் குற்றங்களைச் செய்பவர்கள் 5 மில்லியனுக்கு தாண்டாத அபராதம் அல்லது 10 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டிற்கும் ஆளாகுவார்கள்என்று அது கூறியுள்ளது.

அம்லா சட்டம் பிரிவு 4 (1) இன் கீழ் ஒரு குற்றத்திற்காக, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட நபர்கள் 15 வருடங்களுக்கு மிகாமல் சிறையில் அடைக்கப்படலாம் மற்றும் அந்த நேரத்தில் சட்டவிரோத செயல்பாடு அல்லது கருவிகளின் வருமானத்தின் தொகை அல்லது மதிப்பைவிட ஐந்து மடங்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

எந்தவொரு சட்டவிரோத எம்எஸ்பி கும்பலுடனும் பணத்தை அனுப்புவதற்கு வழி தேட வேண்டாம் என்றும், பிரச்சனை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட எவரும் நிதி இழப்பிலிருந்து பாதுகாக்கப்பட மாட்டார்கள் என்றும் அந்த அறிக்கையில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.