கோலாலம்பூர்: மலேசிய விமானங்களின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டை வகை 1-லிருந்து வகை 2-க்கு குறைத்து, பெடரல் ஏவியேஷன் அடோரிட்டி (யுஎஸ்– எப்ஏஏ) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்த கூடுதல் தகவலோ காரணமோ தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்துலக ஊடகங்களின் தொடர்ச்சியான அறிக்கைகளுக்குப் பிறகு இப்போது இது பரவலாக பரப்பப்படுகிறது.
நேற்றிரவு திங்கட்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், எப்ஏஏயின் நடவடிக்கைகள் குறித்து தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
வகை 1-லிருந்து வகை 2-க்கு தரமிறக்குதல் மலேசியாவை தளமாகக் கொண்ட எந்தவொரு விமான நிறுவனத்திற்கும் தாக்கங்களைக் கொண்டு வரும். எப்ஏஏயிம் கீழ் உள்ள பிற இடங்களுக்கு புதிய பயணப் பாதைகளைத் திறக்க விரும்பும் திட்டத்தை முறியடிக்கும் வகையில் இரு அமைந்துள்ளது.
இதுவரை, மலேசியாவில் எந்தவொரு தரப்பும் எவ்வித அறிக்கையையும் வெளியிட்டதாக தெரிவிக்கப்படவில்லை. எதிர் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் எப்ஏஏயின் தொடர் அறிக்கைக்காக போக்குவரத்து அமைச்சகம் காத்திருப்பதாக அஸ்ட்ரோ அவானிக்கு தெரிவிக்கப்பட்டதாக அச்செய்தித் தளம் பதிவிட்டுள்ளது.
விமானத் தொழில் விமர்சகர்களின் கூற்றுப்படி, எப்ஏஏயின் இந்நடவடிக்கை மலேசியாவை தளமாகக் கொண்ட விமானங்களின் நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் பாதுகாப்பற்றவை என்று அர்த்தமாக்கிவிடாது என்று குறிப்பிட்டுள்ளனர். தரமிறக்குதல் என்பது ஒரு நாட்டில் விமானத் துறையின் ஒழுங்குமுறை நிலை குறித்த எப்ஏஏயின் தனிப்பட்டக் கருத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது.
லயன் ஏர் மற்றும் எத்தியோப்பியன் ஏர்வேஸ் சம்பவத்தில் நூறுக்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற 737 மேக்ஸ் விமானம் சம்பந்தப்பட்ட விபத்து குறித்த விமர்சனங்களிலிருந்து எப்ஏஏ நிறுவனமே இன்னும் மீழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனிசியா மற்றும் வியட்நாம் வகை 1-இல் இருப்பதாகக் கூறப்படுகிறது.