கோத்தா கினபாலு – இமான் என்ற பெயர் கொண்ட மலேசியாவின் கடைசி சுமத்ரா காண்டாமிருகம் நேற்று சனிக்கிழமை மாலை 5.35 மணியளவில் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் சுமத்ரா காண்டாமிருகங்களின் இனம் மலேசியாவில் முற்றாக அழிக்கப்பட்டிருக்கிறது என்ற சோகச் செய்தியும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அண்மையக் காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த இமான் அதிர்ச்சியால் இறந்ததாக சபா மாநில வனவிலங்குத் துறை அறிவித்ததாக, மாநில சுற்றுலா, கலாச்சார, சுற்றுச் சூழல் அமைச்சர் டத்தோ கிறிஸ்டினா லியூ தெரிவித்தார்.
கடந்த மார்ச் 2014-இல் பிடிக்கப்பட்ட இமான் என்ற அந்த பெண் காண்டாமிருகத்திற்கு சிறப்பான கவனிப்பும், மருத்துவ வசதிகளும் வழங்கப்பட்டன என்றும் இதைவிடக் கூடுதலாக அதைக் கவனித்திருக்க முடியாது என்றும் கிறிஸ்டினா மேலும் கூறினார்.
இதற்கிடையில் இமானின் உயிரணுக்கள் அதனிடமிருந்து பெறப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் இதன் மூலம், இந்தோனிசியாவுடன் இணைந்து செயற்கை கருத்தரிப்பு முறையில் சுமத்ரா காண்டாமிருகங்களை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கிறிஸ்டினா கூறியுள்ளார்.