கோலாலம்பூர்: சிவா ராஜராமன், 30, எட்டு மாதங்கள் காவலில் வைக்கப்பட்டு 2017-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதியன்று தாப்பா சிறையில் இருந்து விடுவிக்கப்படவிருந்தார். ஆயினும், அதே நாளில், அவர் காவலில் இறந்துவிட்டதாகவும், அவரது உடல் தாப்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது.
சிவாவின் இடது காலில் உள்ள ஐந்து விரல்களும் வெட்டப்பட்டிருந்ததாகவும், அவரது இடது காலில் வேறு காயங்கள் இருந்ததாகவும் குடும்பத்தினர் கண்டறிந்தனர்.
இப்போது, கிட்டத்தட்ட 33 மாதங்களுக்குப் பிறகு, சிவாவின் தாயாரான, 59 வயது முனியம்மா ராமன், தனது மகனின் மரணத்திற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ஏனெனில் ஈப்போ உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்ட போதிலும் எந்த விசாரணையும் அமைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முனியம்மா, தனது மூன்று பிள்ளைகளுடன் கோலாலம்பூரில் இன்று திங்கட்கிழமை தனது வழக்கறிஞர் எம். விஸ்வநாதனை சந்திக்க வந்தார்.
சிவாவின் மரணம் தொடர்பான ஆதாரங்களை சமர்ப்பிக்கவும், மரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடவும் அரசு வழக்கறிஞர் உத்தரவிடுமாறு முனியம்மா, 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதியன்று முதன் முதலில் ஈப்போவில் உள்ள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
“சிவாவின் மரணம் தொடர்பான ஆதாரங்களை விண்ணப்பதாரருக்கு வழங்குமாறு நீதிபதி ஹாஷிம் ஹம்சா, 2018-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதியன்று வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.”
“பிரேத பரிசோதனை அறிக்கைகள், பகுப்பாய்வு அறிக்கைகள், காவல் துறை அறிக்கைகள், சாட்சி அறிக்கைகள், படங்கள், திட்ட ஓவியங்கள், சிசிடிவி காட்சிகள் ஆகியவை இதில் அடங்கும்” என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.
நியாயமான நேரத்திற்குள் ஆவணங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதி ஹாஷிம் உத்தரவிட்ட போதிலும், இந்த ஆண்டு மே 30-ஆம் தேதியன்று மட்டுமே இந்த வழக்கில் துணை அரசு வழக்கறிஞர் ஒருவர் தாப்பா காவல்துறைக்கு கடிதம் எழுதி சிவாவின் திடீர் மரணம் குறித்த அறிக்கைகளை கோரினார்.
“குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 333 (2) கீழ், விசாரணை ‘கூடிய விரைவில்‘ தொடர வேண்டும் என்று கூறுகிறது.”
“இருப்பினும், 33 மாதங்களுக்குப் பிறகு, எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை,” என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அகமட், சட்டத்துறை அமைச்சர் வி.கே.லீவ் மற்றும் உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் உள்ளிட்ட பல தரப்பினருக்கு இந்த ஆணை 30 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதாக விஸ்வநாதன் தெரிவித்தார்.