Home One Line P2 உலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது

உலகில் ஆயிரம் மில்லியனுக்கும் மேல் சொத்து வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2,153-ஐ தாண்டியது

936
0
SHARE
Ad

இலண்டன் – கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் சொத்துகளின் மதிப்பும் நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாக இலண்டன் அமைப்பு ஒன்றின் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆயிரம் மில்லியன் என்பது ஆங்கிலத்தில் ஒரு பில்லியன் எனக் கணக்கிடப்படுகிறது. ஆயிரம் மில்லியன்களுக்கும் மேற்பட்ட சொத்துகளை வைத்திருப்பவர்களை பில்லியனர்கள் என்று அழைக்கிறார்கள். இவர்களின் எண்ணிக்கை 2,153-ஐ தற்போது தாண்டியுள்ளதாகவும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அரசாங்கங்களின் ஏற்றத் தாழ்வுகள் மிக்க பொருளாதாரக் கொள்கைகளால் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் ஒக்ஸ்ஃபாம் (Oxfam) என்ற அந்த அமைப்பின் ஆய்வுகள் மேலும் குறிப்பிட்டுள்ளன.

#TamilSchoolmychoice

உலகிலேயே பணக்காரர்களாகத் திகழும்  1 விழுக்காட்டு மக்களின் சொத்து மதிப்பு மற்ற மக்களின் மொத்த சொத்துகளை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் இந்த ஆய்வுகள் கண்டுள்ளன.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் முதல் 20 நபர்களின் மொத்த சொத்து மதிப்பு 672 பில்லியன் டாலர்களில் இருந்து 2012 முதல் இரண்டு மடங்காக 1,397 பில்லியன்களாக உயர்ந்துள்ளது.

இதில் தனது சொத்தை அதிக அளவில் உயர்த்தியவர் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் சக்கர்பெர்க்தான் (படம்). கடந்த ஆண்டில் மட்டும் அவரது சொத்து கூடுதலாக 6 பில்லியன் டாலர்கள் மதிப்பு உயர்ந்தது. இவர் உலகிலேயே 5-வது பெரிய பணக்காரராக மதிப்பிடப்படுகிறார்.

உலகிலேயே மிகப் பெரிய பணக்காரரான அமேசோன் நிறுவனத்தின் உரிமையாளர் ஜெப் பெசோஸ் 116 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் திகழ்கிறார்.

உலகின் முதல் மூன்று பணக்காரர்கள் மட்டும் கடந்த பத்தாண்டுகளில் தங்களின் சொத்துகளை கூடுதலாக 231 டாலர்கள் உயர்த்தியுள்ளனர்.

அதேவேளையில் வறுமைப் பிடியில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் உலக அளவில் கடந்த 20 ஆண்டுகளில் குறைந்திருப்பதாகவும் ஆய்வுகள் காட்டுகின்றன.

ஒரு நாளைக்கு 1 டாலர் 90 காசுகளுக்குள் வாழ்பவர்களின் எண்ணிக்கை 1990-ஆம் ஆண்டிலிருந்து 1.1 பில்லியன் குறைந்திருக்கிறது என்றும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

ஒருபக்கம் பணக்காரர்களின் எண்ணிக்கையும், அவர்களின் சொத்து மதிப்பும் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில் 2015-ஆம் ஆண்டு கணக்குப்படி 736 மில்லியன் மக்கள் அதிகமான வறுமைப் பிடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் அவர்களில் பாதிப் பேர்கள் சகாரா-ஆப்பிரிக்கா பகுதிகளில் வாழ்கிறார்கள் என்றும் இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.