Home One Line P2 ஜோகூர் அம்னோ – பெர்சாத்து இடையில் சமாதானமா? பொய் சொல்கிறார்கள்!

ஜோகூர் அம்னோ – பெர்சாத்து இடையில் சமாதானமா? பொய் சொல்கிறார்கள்!

739
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஜோகூர் மாநில அம்னோ, பெர்சாத்து கட்சிகளுக்கிடையில் நிலவிய பூசல்களைத் தீர்க்க பிரதமர் மொகிதின் யாசின் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார் என்றும் அதன் மூலம் சமாதானம் ஏற்பட்டது என வெளிவந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஜோகூர் மாநில பெர்சாத்து தலைவர் மஸ்லான் பூஜாங் பொய் கூறுகிறார் என முன்னாள் மந்திரி பெசார் ஓஸ்மான் சபியான் (படம்) அவரைச் சாடியிருக்கிறார்.

தானும் அந்த சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் எனினும் தீர்வுகள் காணப்படவில்லை என்றும் கூறிய ஓஸ்மான் “மஸ்லான் பொய் கூறியிருக்கிறார். அவர் ஒரு பொய்க்காரர்” எனக் கடுமையாகப் பதிலடி கொடுத்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

அவரைத் தொடர்பு கொண்டபோது இவ்வாறு கூறினார் என மலேசியாகினி இணைய ஊடகம் தெரிவித்தது.

ஓஸ்மான் மொகிதின் யாசினின் நெருக்கமான ஆதரவாளராவார். மஸ்லானோ மகாதீருக்கு நெருக்கமானவராகப் பார்க்கப்படுகிறார்.

மொகிதின் இன்று சனிக்கிழமை கூட்டிய சந்திப்புக் கூட்டத்தில் நடப்பு மந்திரி பெசார் ஹஸ்னி முகமட்டும் கலந்து கொண்டார்.

ஜோகூர் மாநிலத்தை தேசிய முன்னணி கூட்டணி கைப்பற்றியதிலிருந்து முட்டல்கள், மோதல்கள் அம்னோ, பெர்சாத்து கட்சிகளுக்கிடையில் அதிகரித்து வருகின்றன.

அரசு நியமனங்களிலும் கருத்து மோதல்கள் உருவாகியுள்ளன. இவை காரணமாக, ஜோகூர் மாநில அரசாங்கம் கவிழும், மாநில சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தல்கள் நடைபெறும் என்னும் அளவுக்கு ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.

அம்னோ-பெர்சாத்து மோதல்கள் ஒருபுறம் இருக்க, மகாதீர், மொகிதின் யாசின் என பெர்சாத்து கட்சிக்குள்ளும் இரு அணிகளாக பிளவுண்டு மோதல்கள் வலுத்து வருகின்றன.

தேசிய முன்னணி கூட்டணி தற்போது 29 சட்டமன்றங்களைக் கொண்டுள்ளது. நம்பிக்கைக் கூட்டணியோ 27 இடங்களைக் கொண்டுள்ளது. ஓரிரு சட்டமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கைக் கூட்டணி பக்கம் கட்சி மாறினாலே நடப்பு ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற நெருக்கடி நிலைமை நீடித்து வருகின்றது.