Home One Line P1 “தக்கியூடின் சொல்வது தவறு” முகமட் அரிப்

“தக்கியூடின் சொல்வது தவறு” முகமட் அரிப்

463
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று நாடாளுமன்றத்தில் அவைத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் அரிப்பை அவரது பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானம் இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 111-109 வாக்குகளில் வெற்றி பெற்றது.

இரண்டே வாக்குகள் வித்தியாசத்தில் முகமட் அரிப் அவைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

வாக்கெடுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் பத்திரிகையாளர்களை முகமட் அரிப் சந்தித்தார். அவருடன் அவையின் துணைத் தலைவர் இங்கா கோர் மிங்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

முகமட் அரிப் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து தானும் அவருக்கு ஆதரவாக அவையின் துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக இங்கா கோர் மிங் அறிவித்தார்.

“எனது பதவிக் காலத்தின்போது நான் எப்போதும் அரசியலமைப்புச் சட்டங்களுக்கும், நாடாளுமன்றச் சட்டங்களுக்கும் மதிப்பளித்து வந்தேன். எந்தத் தீர்மானம் முன்மொழியப்பட்டாலும் அது முறையாக, சட்டதிட்டங்களுக்கேற்ப சமர்ப்பிக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டேன்” என முகமட் அரிப் தெரிவித்தார்.

உலகம் எங்கிலும் பின்பற்றப்படும் நாடாளுமன்ற நடைமுறையில் இதுவரையில் எந்த ஒரு நாடாளுமன்ற அவைத் தலைவரும் நீக்கப்பட்டதாக முன்னுதாரணம் இல்லை என முகமட் அரிப் கூறினார். “ஒரே ஒரு முறை டிரினாட் தொபாக்கோ நாட்டில் மட்டும் அவைத் தலைவர் மாற்றப்பட்டார். அதுவும் கூட அவர் ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதன் காரணமாகவே, மாற்றப்பட்டார். ஆனால், எந்த ஒரு காரணமும் வழங்கப்படாமலேயே நான் மாற்றப்பட்டிருக்கிறேன். எனினும் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை” என முகமட் அரிப் தெரிவித்தார்.

“தக்கியூடின் சொல்வது தவறு”

பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முகமட் அரிப்பிடம் கேள்வி ஒன்று தொடுக்கப்பட்டது. நாடாளுமன்ற விவாதங்களின்போது அவைத் தலைவரை நீக்கும் தீர்மானத்தை அவைத் தலைவரே ஏற்றுக் கொண்டதால் அந்தத் தீர்மானம் சட்டப்படி செல்லும் என பிரதமர் துறை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் தக்கியூடின் ஹசான் கூறியிருந்தார்.

“தக்கியூடினின் கருத்து தவறாகும். அவைத் தலைவர் என்ற முறையில் ஒரு தீர்மானம் சட்டப் படியும், நடைமுறைகளின்படியும் சமர்ப்பிக்கப்பட்டால் அதனை ஏற்றுக் கொள்வதுதான் அவைத் தலைவரின் கடமையாகும். அதையே நான் செய்தேன். அந்தத் தீர்மானத்தை நான் நிராகரித்திருந்தால் அதை வேறுவிதமாக விமர்சித்திருப்பார்கள். ஆனால், ஒரு தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டவுடன் அந்தத் தீர்மானம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என்பதை நாடாளுமன்றம்தான் விவாதித்து நிர்ணயிக்க வேண்டும்” என முகமட் அரிப் தெரிவித்தார்.