Home நாடு தக்கியூடின் ஹாசானுக்கு “ஆஞ்சியோகிராம்” சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

தக்கியூடின் ஹாசானுக்கு “ஆஞ்சியோகிராம்” சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது

804
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நடப்பு மலேசிய அரசியல் சர்ச்சைகளில் முக்கிய நபராகச் சிக்கிக் கொண்டுள்ள சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் இதயநோய் தொடர்பில் மருத்துவமனையில் “ஆஞ்சியோகிராம்” எனப்படும் சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.

இதயப் பிரச்சனைகள் இருப்பின் இதயத்தின் செயல்பாட்டைத் துல்லிதமாகக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்படுவது “ஆஞ்சியோகிராம்” எனப்படும் சிகிச்சையாகும்.

இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏதும் இருக்கின்றனவா, அப்படி இருந்தால் “பைபாஸ்” எனப்படும் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்வதற்காக “ஆஞ்சியோகிராம்” சோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கமாகும்.

#TamilSchoolmychoice

இதயநோய் தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை தக்கியூடின் ஹாசான் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 3 மணி நேர ஆஞ்சியோகிராம் சிகிச்சை முடிந்து அவரின் இதயத்திற்கு செல்லும் இரத்தக் குழாய்களில் “ஸ்டென்” எனப்படும் இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் சிறுகுழல்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன என பாஸ் கட்சியின் துணைத் தலைவரான அப்துல் ரஹ்மான் சமூக ஊடகங்களின் வாயிலாகத் தெரிவித்தார்.

“தக்கியூடின் ஹாசான் தற்போது நலமாக இருக்கின்றார். அவர் பூரண குணமடைய பிரார்த்திப்போம்” எனவும் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

தக்கியூடின் ஹாசான் பாஸ் கட்சியின் தலைமைச் செயலாளருமாவார்.

சர்ச்சையில் சிக்கிய தக்கியூடின் ஹாசான்

கடந்த திங்கட்கிழமையன்று (ஜூலை 26) நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல் நாளில் சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் அவசரச் சட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாக அறிவித்தார். அதைத் தொடர்ந்து அடுத்த சில நாட்களாக நாடாளுமன்ற விவாதங்கள் அமளியோடு நடைபெற்று வந்தன.

சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் தன்னை அவமதித்து விட்டார் என மாட்சிமை தங்கிய மாமன்னர் காட்டமான, கடுமையான அறிக்கை ஒன்றை கடந்த வியாழக்கிழமை (ஜூலை 29) வெளியிட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து கடுமையானக் கண்டனங்களுக்கு தக்கியூடின் ஹாசான் உள்ளானார்.

இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 2) நாடாளுமன்றம் கூடும்போது அவசர கால சட்டம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிப்பேன் என அவர் கூறியிருந்தார்.

எனினும் இன்றைய நாடாளுமன்றக் கூட்டம் ஒஇதத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையில் நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 2 நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் ஒன்றையும் சமர்ப்பித்திருந்தனர்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, சிப்பாங் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் ஹனிபா மைடின் ஆகிய இருவரும் அந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற நடைமுறைப்படி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் பொய் கூறினாலோ, தவறான தகவல்களை வழங்கினாலோ அதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட நாடாளுமன்ற உரிமைகள் மற்றும் சலுகைகள் குழுவிற்கு தீர்மானம் ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமர்ப்பிக்க முடியும்.

அந்தக் குழு அந்த விவகாரத்தை விசாரித்து முடிவெடுக்கும்.

அந்த நடைமுறைக்கேற்ப கடந்த ஜூலை 26-ஆம் தேதி அவசர கால சட்டம் குறித்து தக்கியூடின் ஹாசான் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் அவர் தவறான முறையில் நாடாளுமன்றத்தை வழி நடத்தினார் என்ற அடிப்படையில் இந்தத் தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.