Home நாடு அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம்!

அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம்!

1413
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாடு புதியதொரு அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெறவிருக்கிறது.

இதன் காரணமாக, அம்னோ என்ன முடிவெடுக்கும் என்ற பரபரப்பு அரசியல் பார்வையாளர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

இயங்கலை வழி (ஒன்லைன்) இந்த அம்னோ உச்சமன்றக் கூட்டம் நடத்தப்படும்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் கடந்த புதன்கிழமை (ஜூலை 7) இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் ஆளும் தேசியக் கூட்டணியின் பிரதமர் மொகிதின் யாசினுக்கு இனி ஆதரவு தருவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது.

எனினும் அந்த முடிவு பிசுபிசுத்தது. அம்னோவின் இஸ்மாயில் சாப்ரி துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதற்காக அம்னோ உச்சமன்றமோ அதன் தலைமைத்துவமோ கண்டனம் தெரிவிக்கவில்லை.

மாறாக அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியும், முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் தனித் தனியாக பிரதமர் அலுவலகம் சென்று இஸ்மாயில் சாப்ரியைச் சந்தித்து விட்டு வந்தனர்.

தேசியக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், நாளடைவில் அந்த முடிவு மொகிதினுக்கு எதிரான முடிவு மட்டுமே என்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. தேசியக் கூட்டணி அரசாங்கம் ஆதரவு வழங்குவோம் என்பது போன்று அம்னோ தலைவர்களின் நடவடிக்கைகள் அமைந்தன.

அதே சமயத்தில் பல அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மொகிதினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை பகிரங்கமாக எடுத்தனர். அம்னோவின் 9 அமைச்சர்கள் மொகிதினுக்கு ஆதரவாகக் கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டது.

அதற்கும் இதுவரையில் அம்னோ உச்சமன்றத் தரப்பிலிருந்து ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இல்லை.

இந்தச் சூழலில்தான் அம்னோவின் உச்சமன்ற அவசரக் கூட்டம் நாளை நடைபெறுவதால், என்ன முடிவுகள் எடுக்கப்படும் என்ற ஆர்வம் எழுந்துள்ளது.