Home One Line P1 சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் – துன் மகாதீர் வழக்கு

சபாநாயகர், துணை சபாநாயகர் நியமனம் – துன் மகாதீர் வழக்கு

544
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை சபாநாயகர் அசார் ஹருண், துணை சபாநாயகர் அசாலினா ஓத்மான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றத்தில் ஜூலை 23-ஆம் தேதி மனு தாக்கல் செய்துள்ளனர்.

துன் மகாதீருடன் இணைந்து பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்ட முக்ரிஸ் மகாதீர், டாக்டர் மஸ்லீ மலிக், அமிருடின் ஹம்சா மற்றும் ஷாருடின் சாலே ஆகியோர் இந்த வழக்கு மனுவை சமர்ப்பித்துள்ளனர்.

இது குறித்து வெளியிடப்பட்ட ஓர் ஊடக அறிக்கையின்படி, ஜூலை 13-ஆம் தேதி சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட அசார் அசிசான் முதல் பிரதிவாதியாகவும், அசாலினா இரண்டாவது பிரதிவாதியாகவும் இந்த வழக்கில் பெயர் குறிப்பிட்டப்பட்டனர்.

#TamilSchoolmychoice

மற்றொரு துணை சபாநாயகரான முகமட் ராஷிட் ஹஸ்னோன் மற்றும் மக்களவை செயலாளர் நிஜாம் மைடின் பாஷா மைடின் முறையே மூன்றாவது, நான்காவது பிரதிவாதிகளாக பெயர் குறிப்பிடப்பட்டனர்.

அசார் அசிசான் மற்றும் அசாலினா ஒத்மான் ஆகியோரின் நியமனம் செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டுமென்று அவர்கள் இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இவர்களின் நியமனம் அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற விதிமுறைகளுக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

முகமட் அரிப் முகமட் யூசோப்பின் காலியிடத்தை நிரப்ப நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேறொரு பெயரை பரிந்துரைக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் தங்கள் மனுவில் கேட்டுக் கொண்டனர்.

ஜூலை 13 நடந்த முதல் நாள் நாடாளுமன்ற அமர்வில், முன்னாள் சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் நீக்கப்பட்டு, புதிய அவைத் தலைவராக டத்தோ அசார் அசிசான் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், அசார் அசிசானின் பெயரை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தார்.

எனினும் அவரது நியமனம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டனம் செய்தன.

இந்த பதவி ஏற்பைத் தொடர்ந்து அசார் அசிசான் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்தினார். அன்று முழுவதுமாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்து விவாதங்கள், அமளி ஏற்பட்டது.