கோலாலம்பூர், ஏப்ரல் 15- லெம்பா பந்தாய் நாடாளுமன்றத்தில் தன்னை வீழ்த்த 5,000 வாக்குகள் காத்திருப்பதாக நூருல் இசா அன்வார் கவலை தெரிவித்துள்ளார்.
“கடந்த பொதுத்தேர்தலில் 58,000 வாக்காளர்கள் இத்தொகுதியில் இருந்தனர். தற்போது அப்பட்டியல் 71,000 ஆக உயர்ந்துள்ளது. அதில் 5,000 வாக்காளர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று அறியமுடியவில்லை என்றும், அது தொடர்பாக பல முறை புகார் செய்தும் எந்த பயனும் இல்லை” என்றும் வேதனையோடு நூருல் இசா தெரிவித்தார்.
மேலும், தன்னை வீழ்த்த அந்த 5,000 வாக்குகள் இத்தொகுதியில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் வாக்காளர்கள் விழிப்புடன் இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
லெம்பா பந்தாய் கெஅடிலான் கட்சியின் சார்பில் நடந்த பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றிய நூருல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்நிகழ்வில், உரையாற்றிய பெர்சே இணைத்தலைவர் டத்தோ அம்பிகா சீனிவாசன்,
“இப்பொதுத்தேர்தலில் ஒவ்வொரு வாக்கும் மிக முக்கியமானது என்பதால் அனைவரும் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.
நியாயமாகவும்,சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பெர்சே இயக்கம் வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.