புதுடில்லி : (கூடுதல் விவரங்களுடன்) இந்தியாவின் முன்னாள் அதிபரும், முன்னாள் நிதியமைச்சருமான பிரணாப் முகர்ஜி இந்திய நேரப்படி மாலை 6.30 மணியளவில் காலமானார் என அவரது மகன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த பிரணாப் முகர்ஜி புதுடில்லி இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
“எனது தந்தை பிரணாப் முகர்ஜி சற்று முன்பு காலமானார் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவர்களின் சிறந்த கவனம், உழைப்புக்குப் பின்னரும் அவர் காலமாகிவிட்டார். அவருக்காக இந்தியா முழுவதும் இருந்து நீங்கள் வழங்கிய பிராத்தனைகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என பிரணாப்பின் மகன் அபிஜித் முகர்ஜி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டார்.
பிரணாப்பின் மரணத்திற்கு உடனடியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைப் பதிவு செய்தார்.
காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப் முகர்ஜிக்கு 84 வயது. இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவைப் பெற்றவர் அவர்.
பல தவணைகளுக்கு அமைச்சராகப் பதவி வகித்திருக்கிறார். நிதியமைச்சராகவும் பதவி வகித்திருக்கிறார். 1982-இல் தனது 47-வது வயதில் நிதியமைச்சரான அவர் மிகக் குறைந்த வயதில் நிதியமைச்சரானவர் ஆவார்.
மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவரான பிரணாப் 1935-ஆம் ஆண்டில் பிறந்தவர். பல தவணைகளுக்கு மேற்கு வங்காளத்தின் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர்.
சட்டக் கல்லூரியில் படித்து சட்டத்துறைப் பட்டம் பெற்ற பிரணாப் ஓர் ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது தந்தையார் கேகே முகர்ஜி ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு பல ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தவர்.
மேற்கு வங்காளத்தில் தனது சொந்தக் கட்சியை நடத்தத் தொடங்கிய பிரணாப் பின்னர் இந்திரா காந்தியின் கவனத்தை ஈர்த்தார். தனது கட்சியை காங்கிரஸ் கட்சியோடு ஒன்றிணைத்தார். இந்திரா காந்தி பிரணாப்பைப் பல தவணைகளுக்கு நாடாளுமன்ற மேலவை (இராஜ்ய சபா) உறுப்பினராக நியமித்தார்.
மக்களவைத் தேர்தலில் நின்று சில தவணைகள் வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது பிரணாப் 2012-இல் இந்திய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் அதிபராகப் பதவி வகித்த காலகட்டத்தில்தான் நரேந்திர மோடியின் தலைமையில் 2014-இல் பாஜக ஆட்சியைப் பிடித்தது.
அதிபராக இருந்து கொண்டே நரேந்திர மோடியுடனும் மிகுந்த நெருக்கம் பாராட்டினார் பிரணாப். பல தருணங்களில் நரேந்திர மோடி பிரணாப்பின் அறிவாற்றலையும், தலைமைத்துவப் பண்பையும் பாராட்டியிருக்கிறார்.
ஒருமுறை பிரணாப்பைச் சந்தித்தபோது அவரது காலில் விழுந்து வணங்கி தனது மரியாதையை வெளிப்படுத்தினார் மோடி.
பிரணாப்பின் மறைவு குறித்து உடனடியாக தனது டுவிட்டரில் பதிவிட்டார் நரேந்திர மோடி.
“பாரத ரத்னா ஸ்ரீ பிரணாப் முகர்ஜியின் மறைவு குறித்து இந்தியாவே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. நமது நாட்டின் மேம்பாடுகளை வார்த்தெடுப்பதில் அழிக்கமுடியாத தடயத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார். மிகச் சிறந்த அறிஞர். உயர்ந்த தேசியவாதி. எல்லா அரசியல் கட்சிகளாலும், சமுதாயத்தின் அனைத்து பிரிவினராலும் மதிக்கப்பட்டவர் அவர்” என நரேந்திர மோடி பிரணாப்புக்கு தனது இரங்கல் செய்தியில் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரணாப்பின் மறைவு குறித்து காங்கிரஸ் கட்சியிலிருந்தும், மற்ற அரசியல் தலைவர்களிடத்திலிருந்தும் இரங்கல் செய்திகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரணாப் மறைவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.