மாஸ்கோ : இங்கு நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ள வருகை புரிந்திருக்கும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன தற்காப்பு அமைச்சர் ஜெனரல் வெய் பெங்கே, இருவருக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) நடைபெற்றது.
இருநாட்டு உயர்மட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆக்ரோஷமான முறையில் சீனத் துருப்புகள் நடந்து கொண்டதுதான் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு ஒப்பந்தங்கள் மீறப்பட்டதற்கான காரணம் என ராஜ்நாத் சிங் இந்த சந்திப்புக் கூட்டத்தில் நேரடியாகக் குற்றம் சுமத்தினார்.
தனது சந்திப்பு குறித்த விவரங்களை ராஜ்நாத் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organization), காமன்வெல்த் சுதந்திர நாடுகள் அமைப்பு (Commonwealth of Independent States), கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்த நாடுகள் (Collective Security Treaty Organization) ஆகிய கூட்டமைப்புகளின் மாநாடு மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டிற்கு ராஜ்நாத் சிங்கும், சீனத் தற்காப்பு அமைச்சரும் தங்களின் உயர்மட்ட குழுவினரோடு வருகை தந்திருக்கின்றனர்.
இரு தரப்புகளுக்கும் இடையிலான சந்திப்புக் கூட்டம் சுமார் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது.
சீன-இந்திய எல்லையில் அதிகரிக்கும் பதட்டம்
கடந்த சில மாதங்களாக சீனா-இந்திய எல்லையில் நீடித்து வரும் பதட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. லடாக்கில் லே வட்டாரத்திற்கு நேற்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வருகை தந்த இந்திய இராணுவத தளபதி மனோஜ் முகுந்த் நரவானே அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளையும், முன்னேற்பாடுகளையும் பார்வையிட்டார்.
இந்த சூழ்நிலையில்தான் இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
சீனாவின் எல்லைப் பகுதியில் இராணுவத் தளவாடங்கள் குவிக்கப்படுகிறது என புகார்கள் எழுந்திருக்கின்றன. இந்தியாவும் இராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது என சீனா குற்றம் சாட்டுகிறது.
எல்லைப் பகுதியில் நிலைமையைப் பார்வையிட்ட பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மனோஜ் முகுந்த் சீனாவுடன் தூதரக ரீதியிலும் இராணுவ ரீதியிலும் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
“கருத்து வேறுபாடுகள் பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்க்கப்படும். எதிர்காலத்திலும் பேச்சு வார்த்தைகள் தொடரும்” என மனோஜ் முகுந்த் கூறினார்.
கடந்த ஆகஸ்ட் 29-30 ஆகிய தேதிகளில் இந்தியப் பகுதிக்குள் சீன இராணுவம் நுழைய முயற்சி செய்தது என்றும் சீன ராணுவத்தினரின் அந்த முயற்சியை இந்திய ராணுவம் தடுத்தது என்றும் இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.