அதைத் தொடர்ந்து இன்று பிற்பகலில் நடைபெற்ற எஸ்பிபியின் நல்லடக்கச் சடங்கின் போது, முழு சீருடையுடன் அணிவகுத்து வந்த காவல் துறையினர் 72 மரியாதை குண்டுகளை முழங்கினர்.
காலை முதல் எஸ்பிபியின் நல்லுடலுக்கு சாரை சாரையாக வரிசையில் வந்து பொதுமக்கள் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர். அவரது நல்லுடல் கண்ணாடிக் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் மலேசிய நேரப்படி 3.00 மணியளவில் அவரது நல்லுடல் கண்ணாடிப் பெட்டியில் இருந்து அகற்றப்பட்டு, அவர் நல்லடக்கம் செய்யப்படும் புதைகுழியில் இறக்கப்பட்ட காட்சி சுற்றியிருந்தவர்கள், அந்த இறுதிச் சடங்குகளை நேரலையாகத் தொலைக்காட்சி வழி பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அனைவரது கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
எஸ்பிபியின் மகன் சரண் இறுதிச் சடங்குகளை நடத்தினார்.
நடிகர் விஜய் நேரில் அனுதாபம்
நடிகர் விஜய் நேரில் வந்து எஸ்பிபியின் நல்லுடலுக்கு அஞ்சலி செலுத்தி விட்டு, எஸ்பிபி சரனையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பல நடிகர், நடிகையர், பாடகர்கள், இசையமைப்பாளர்கள், எஸ்பிபியின் நல்லுடலுக்கு கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினர்.
பல பிரமுகர்கள் அவருடனான தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
பிரதமர், அதிபர் இரங்கல்
ஒரு மாதத்திற்கும் மேலாக கொவிட்19 தொற்றுடன் போராடி வந்த எஸ்பி பாலசுப்ரமணியம் செப்டம்பர் 25 அன்று சென்னையில் எம்ஜிஎம் மருத்துவமனையில் காலமானார்.
“ஸ்ரீ எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் துரதிர்ஷ்டவசமான மறைவுடன், நமது கலாச்சார உலகம் ஏழ்மையானது. இந்தியா முழுவதும் உள்ள வீடுகளில், அவரது இனிமையான குரல், இசை பல தசாப்தங்களாக இரசிகர்களை கவர்ந்தது. துக்கமான இந்நேரத்தில் , என் எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், அபிமானிகளுடனும் உள்ளன. ஓம் சாந்தி, ” என்று பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
“எஸ்.பி.பாலசுப்ரமணியம் காலமானதை அடுத்து, இந்திய இசை அதன் குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரது எண்ணற்ற இரசிகர்களால் ‘பாடும் நிலா’ அல்லது என்று அழைக்கப்பட்ட இவருக்கு பத்ம பூஷண் மற்றும் பல தேசிய விருதுகள் வழங்கப்பட்டன. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அபிமானிகளுக்கும் இரங்கல் ”என்று இந்திய அதிபர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்தியத் துணை அதிபரான வெங்கையா நாயுடு, பாடகரின் மறைவுக்கு டுவிட்டரில் இரங்கல் தெரிவித்தார். “புகழ்பெற்ற இசைக்கலைஞர் ஸ்ரீ எஸ்.பி.பாலசுபிரமணியம் அவர்களின் துயர மறைவுக்கு அதிர்ச்சி. இசை உலகில் நிரப்ப முடியாத ஒரு வெற்றிடத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார், ”என்று அவர் டுவிட்டரில் பரிவிட்டுள்ளார்.
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், ஆம் ஆத்மி கட்சியும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
“ஸ்ரீ எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைந்ததைப் பற்றி வருத்தமாக இருக்கிறது. இந்தியா தனது புகழ்பெற்ற குரல்களில் ஒன்றை இழந்துள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இரசிகர்களுக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம், ” என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.