கோலாலம்பூர்: இளஞ்சிவப்பு நிற கொவிட்19 கண்காணிப்பு கை வளையம் அணிவது குறித்து சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை பிரதமர் மொகிதின் யாசின் பின்பற்றவில்லை என்ற கூற்றை பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.
நேற்று ஒரு தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பில் தோன்றிய பிரதமர், ஏன் சுய தனிமைப்படுத்தலில் இருந்தபோதிலும், அவ்வாறு செய்யவில்லை என்ற கேள்விகள் எழுந்தன.
பிரதமர் துறை அமைச்சர் சுல்கிப்ளி முகமட் அல்-பக்ரி கலந்து கொண்ட ஒரு கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின்னர் மொகிதின் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் அவர் கொவிட்19 தொற்றுக்கு சாதகமாக இல்லை என்று பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
மைசெஜ்தெரா கைபேசி பயன்பாட்டின் மதிப்பீட்டு செயலியைப் பயன்படுத்தி 14 நாட்கள் சுய-தனிமைப்படுத்தவும், அவரது உடல்நிலையை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டதால், மொகிதின் கண்காணிப்பு கை வளையம் அணிய சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் இன்று ஓர் அறிக்கையில் கூறியது.
“எனவே, பிரதமர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறியதாகக் கூறப்படுவது உண்மையல்ல.”
இதற்கிடையில், அக்டோபர் 5- ஆம் தேதி அவர் மேற்கொண்ட பரிசோதனையின் முடிவும் எதிர்மறையாக வந்துள்ளது என்று அது கூறியது.
இந்த கண்காணிப்புக் காலத்தில் ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சை பெறுமாறு பிரதமருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
“இப்போதைக்கு, பிரதமர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். ஆனால் சுகாதார அமைச்சினால் நிர்ணயிக்கப்பட்ட 14 நாட்கள் முடியும் வரை அவர் தொடர்ந்து சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளாக நேரிடும்.” என்று அது கூறியது.