Home One Line P1 கொவிட்19: சபா தேர்தலும் தொற்று அதிகரிப்புக்கு ஒரு காரணம்!- பிரதமர்

கொவிட்19: சபா தேர்தலும் தொற்று அதிகரிப்புக்கு ஒரு காரணம்!- பிரதமர்

620
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று வேகமாகப் பரவி வரும் இந்நேரத்தில் மக்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கேட்டுக் கோண்டார்.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் தொற்று சம்பவங்களினால் இந்த கவலை எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

சபாவில் நடந்து முடிந்த மாநிலத் தேர்தல் தொற்று பரவுவதற்கு வழிவகுத்ததை பிரதமர் ஒப்புக்கொண்டார். மேலும், தாம் பிரச்சார நேரத்தில் சிவப்பு மண்டல இடங்களில் பிரச்சாரத்தை மேற்கொள்ளவில்லை என்றும், ஒவ்வொரு பிரச்சார நடவடிக்கைகளும் முடிந்த பிறகு தாம் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை அமல்படுத்தியதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

தற்போது தாம் வீட்டு தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும், அவருடன் அமைச்சர்கள் ,துணை அமைச்சர்கள் சிலரும் இந்த தனிமைப்படுத்தல் செயல்முறையில் ஈடுபட்டுள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்த இக்கட்டான நிலையில், அரசு மீண்டும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்த விரும்பவில்லை என்று பிரதமர் கூறினார். அவ்வாறு செய்தால் நாட்டில் சமூக, பொருளாதார நடவடிக்கைகள் பெருமளவில் பாதிக்கப்படும் என்று அவர் நினைவூட்டினார். ஆகையால், அரசு குறிப்பிட்ட இடங்களில் கட்டுப்பாடுகளை மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

இந்த தருணத்தில் ஒரு சில தரப்பினர் அரசியல் ரீதியிலான கருத்துகளை வெளியிட்டி வருவதை பிரதமர் சுட்டிக் காட்டினார். அரசாங்கம் தற்போதைக்கு நிலைமையை இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அவர் கூறினார்.

முன்னதாக, கொவிட்19 தொற்றைக் கையால்வதில் அரசு பெரிய தவற்றை செய்து விட்டதாக பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்திருந்தார். தொற்று பரவுவதற்கு முன்னதாகவே,  சபாவில் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, கொவிட்19 தொற்றைக் கையாள்வதில் அரசாங்கம் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியிருந்தார்.

குறிப்பாக அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில் அரசு உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை யாரும் மீறாமல் இருந்திருக்க வேண்டும் என்றும், விதிகள் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் அமல்படுத்தப்படாமல், அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“எந்தவொரு ஊகங்களையும், வதந்திகளையும் தவிர்ப்பதற்காக தொற்றுநோயின் சமீபத்திய அலைகளை கையாள்வதில் தகவல்களை வழங்குமாறு அரசாங்கத்தை நான் கேட்டுக்கொள்கிறேன்.

“இரு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள் நெருக்கடியின் போது மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிப்பது முக்கியம். “என்று அவர் கூறியிருந்தார்.

இப்போதைக்கு முக்கியமாக மக்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மதித்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

இதுவரை, பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி முகமட் உட்பட பல அரசியல்வாதிகள் கொவிட்19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டாக்டர் சுல்கிப்ளியைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசினும் 14 நாட்கள் வீட்டிலேயே சுய தனிமைப்படுத்தலுக்கு ஆளானார்.

இன்றைய நிலவரப்படி, நாட்டில் 691 சம்பவங்கள் பதிவாகி உள்ளது. கெடாவில் 397 சம்பவங்களும், சபாவில் 219 சம்பவங்களும் பதிவாகி உள்ளன. மேலும், இன்று ஒரு வயது குழந்தை உட்பட நால்வர் தொற்றுக்கு பலியாகி உள்ளதாக சுகாதார  இயக்குனர் டாக்டர் நுர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருந்தார்.