கோலாலம்பூர்: தோட்டத் தொழில் மூலப் பொருட்களுக்கான அமைச்சர் கைருடின் அமான் ரசாலி மீதான தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதாகக் கூறப்படும் விசாரணை, சட்டத்துறைத் தலைவர் அலுவலகம், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் இல்லை (என்எப்ஏ) என்று வகைப்படுத்தி உள்ளதாக புக்கிட் அமான் இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹுசிர், கைருடினுக்கு தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டத்தின் (சட்டம் 342) கீழ் வீட்டு கண்காணிப்பு உத்தரவு (படிவம் 14 பி) வழங்கப்படவில்லை என்பதே இதற்கு காரணம் என்று விளக்கினார்.
“வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த சட்டம் 342- இன் பிரிவு 15 (1)- இன் கீழ் அமைச்சருக்கு உத்தரவு வழங்கப்படவில்லை
“அந்த அறிக்கையின் அடிப்படையில், சடத்துறைத் தலைவர் அலுவலகம் அமைச்சருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று முடிவு செய்தது. மேலும், சட்டம் 342- இன் கீழ் அக்குற்றச்சாட்டின் அடிப்படையில் வலுவான அறிக்கை எதுவும் இல்லை” என்று அவர் கூறினார்.