கோலாலம்பூர்: தேசிய கூட்டணிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கான அம்னோவின் முடிவை கட்சி “மதிக்கிறது” என்ற பிகேஆர் பொதுச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் அறிக்கை ஜசெகவின் அதிருப்தியைத் தூண்டுவதாகத் தெரிகிறது.
ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், அம்னோவுடன் ஒத்துழைப்பு இருப்பதாக இது சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்தார். இது அவருடைய கட்சி ஏற்றுக்கொள்ளாத ஒன்று என்று கூறினார்.
அம்னோவுடனான ஒத்துழைப்பு ஒருபோதும் ஒரு விருப்பமாக இருக்கவில்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஜசெக தெளிவாகக் கூறியதாக அவர் கூறினார்.
“நாங்கள் அம்னோவுடன் சண்டையிட்டோம். சபா தேர்தல் போது, அம்னோவின் தலைமையில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று சொன்னேன்,” என்று லிம் குவாங் எங் கூறினார்.
“தேர்தலில் நாங்கள் அவர்களுக்கு எதிராக இருக்கிறோம். அம்னோ தலைமையிலான ஊழல், அதிகார அத்துமீறல் அரசாங்கத்திலிருந்து விடுபடுவதற்கான எங்கள் விருப்பத்தில் நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம். நாங்கள் எப்படி பின்வாங்கி அவர்களுடன் இணைந்து பணியாற்ற முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், சைபுடின், அம்னோவின் முடிவை பிகேஆர் மதிப்பதாகவும், ஆனால் அதே நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து “மக்கள் ஆணையை மீட்டெடுப்பதில்” கட்சி தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.