கோலாலம்பூர் : நாட்டில் பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டபடி அவசர காலம் அறிவிக்கப்படாது என்றும் அதற்கான பரிந்துரையை மாமன்னர் நிராகரித்து விட்டார் என்றும் அரண்மனை செய்தி அறிக்கை தெரிவித்தது.
அதே வேளையில் அரசாங்கத்தின் நிலைத் தன்மையை ஆட்டக் காணச்செய்யும் அளவுக்கு அரசியல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் போக்கு குறித்தும் மாமன்னர் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொண்டார்.
அரண்மனைக் காப்பாளர் அகமட் பாடில் ஷம்சுடின் மூலமாக மாமன்னரின் அறிக்கை வெளியிடப்பட்டது.
அரண்மனையில் மலாய் ஆட்சியாளர்களின் கூட்டம் நடைபெற்று முடிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்குள் மாமன்னரின் அறிக்கை வெளியிடப்பட்டது.
மலேசிய அரசியல் அமைப்புச் சட்டம் 150 பிரிவு ஒன்றின் படியும், அது தொடர்பான மற்ற சட்டங்களின்படியும் கொவிட்-19 தொற்றை எதிர்கொள்ள அவசர காலத்தை அமுல்படுத்த அனுமதிக்கும்படி பிரதமர் மொகிதின் யாசின் கேட்டுக் கொண்டார் எனவும் மாமன்னரின் அறிக்கை சுட்டிக் காட்டியது.
அந்தப் பரிந்துரையைக் கவனமாகப் பரிசீலித்த பின்னர், மலாய் ஆட்சியாளர்களின் கருத்துகளையும் கேட்ட பின்னர், நாட்டின் நிலைமையையும் கருத்தில் எடுத்துக் கொண்டு, நடப்பு அரசாங்கம் இப்போது வரை கொவிட்-19 பிரச்சனையைச் சிறப்பாகவே கையாண்டு வந்துள்ளதாக மாமன்னர் தெரிவித்ததாகவும் அரண்மனை அறிக்கை குறிப்பிட்டது.
நாட்டின் நடப்பு பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தின் திறன்மீது நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும், கொவிட்-19 பரவலைத் தடுக்க தொடர்ந்து திட்டங்களையும், கொள்கைகளையும் அமுல்படுத்துவதில் அரசாங்கத்தின் செயல்பாடு குறித்து நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் மாமன்னர் தெரிவித்தார்.
எனவே, இப்போதைய சூழ்நிலையில் நாடு முழுமையிலோ அல்லது சில பகுதிகளிலோ அவசர காலத்தை அமுல்படுத்தத் தேவையில்லை என மாமன்னர் கருதுவதாகவும் அரண்மனை அறிக்கை மேலும் தெரிவித்தது.