கோலாலம்பூர்: நேற்று நாடாளுமன்ற அமர்வு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டதற்கான முடிவின் பின்னணியில் உள்ள நோக்கம் மற்றும் கொவிட் -19 கவலை தொடர்பாக அரை நாள் அமர்வுக்கு பரிந்துரைத்தது கேள்வியை எழுப்புவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று (நவம்பர் 2) நாடாளுமன்ற கூட்டத்தொடரை முடிவுக்கு கொண்டுவருவதற்கான முடிவு அதன் பின்னால் சில நோக்கங்களைக் கொண்டிருக்கலாம். ஆனால், கொவிட் -19 தொற்றுக்கு அஞ்சி அல்ல,” என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“சட்டத்துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான், அமர்வு ஒரு வாரம் ஒத்தி வைக்கப்படலாம் என்றும் பின்னர், அது தினசரி அடிப்படையில் ஒத்திவைக்கப்படும் என்றும் கூறினார், எனவே இங்கே சரியான முடிவு என்ன?
“காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை அமர்வைக் குறைப்பதன் மூலம் கொவிட் பரவுவதை நீங்கள் எவ்வளவு கட்டுப்படுத்த முடியும்? இது என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
வழக்கமாக திங்கள் முதல் வியாழக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை நாடாளுமன்ற அமர்வு நடைபெறும்.
பல மக்களவை ஊழியர்கள் தொற்றுக்கு சாதகமாக பரிசோதித்ததை அடுத்து, கொவிட் -19 தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த நேற்றைய அமர்வு மதியம் 1 மணியுடன் முடிக்கும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
“இந்த நேரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டிய பல பிரச்சனைகள் மற்றும் தீர்மானங்கள், நாடாளுமன்ற அமர்வை குறைப்பதன் மூலம் எந்த வகையிலும் உதவாது.மக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்.
“எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட சில தீர்மானங்களை தவிர்ப்பதற்கான மற்றொரு அரசியல் உத்தி இது என்று நான் நம்புகிறேன்” என்று பிரபாகரன் கூறினார்.