வாஷிங்டன் : சுமார் 3 வார கால இழுபறிக்குப் பின்னர், நீதிமன்ற வழக்குகளின் தோல்விகளுக்குப் பின்னர் இறுதியாக நடப்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து புதிய அதிபரின் பதவியேற்புக்கான சடங்குகள் தொடங்கியிருக்கின்றன. அதிகாரப் பரிமாற்றங்களுக்கான முறையான நடைமுறைகள் வெள்ளை மாளிகையில் செயல்படுத்தப்படத் தொடங்கியிருக்கின்றன.
ஜோ பைடனும் தனது அமைச்சரவைக்கானத் தேர்வுகளை அறிவிக்கத் தொடங்கியிருக்கிறார்.
அமெரிக்க மரபுப்படி அமைச்சரவை உறுப்பினர்கள் முதலில் அதிபரால் முன்மொழியப்படுவார்கள். பின்னர் அவர்களை செனட் அவை முறையாக அங்கீகரிக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் பதவியேற்பார்கள்.
இதற்கிடையில் அமெரிக்காவின் பல்வேறு அரசாங்க அதிகார மையங்களும் பைடனின் வெற்றியை அங்கீகரித்திருக்கின்றன.
பைடனின் அமைச்சரவையில் சில அமெரிக்க இந்தியர்களும் இடம் பெறுவார்கள் என்ற ஆரூடங்களும் எழுந்துள்ளன.