வாஷிங்டன் : டிக்டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுவதற்கு அமெரிக்க அரசாங்கம் மீண்டும் ஒருமுறை கால அவகாச நீட்டிப்பை வழங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக இந்த கால அவகாச நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
டிக்டாக் குறுஞ்செயலியின் உரிமையாளரான பைட் டான்ஸ் நிறுவனம், அமெரிக்காவின் ஒராக்கல் நிறுவனம், பேரங்காடி நிறுவனமான வால்மார்ட் ஆகிய மூன்றும் இணைந்து டிக்டாக்கின் அமெரிக்க வணிக செயல்பாடுகளை எடுத்துக் கொள்ளும் முடிவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்திருந்தார். இந்தப் புதிய நிறுவனம் டிக்டாக் குளோபல் என அழைக்கப்படும்.
கடந்த புதன்கிழமை அமெரிக்க அரசாங்கம் இந்த விற்பனை எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் தேதிக்கும் இறுதி செய்யப்பட வேண்டும் என அறிவித்தது.
இதற்கு முன்னர் டிக்டாக்குக்கு வழங்கப்பட்ட விற்பனை அனுமதிக்கான கால அவகாசம் நவம்பர் 27-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்தது.
புதிய டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் அமெரிக்க பங்குதாரர்கள் 53 விழுக்காட்டைக் கொண்டிருப்பர். சீனாவின் முதலீட்டாளர்கள் 36 விழுக்காட்டைக் கொண்டிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒராக்கலும் வால்மார்ட்டும் இந்த நிறுவனத்தின் முழுமையான ஆதிக்கத்தைக் கொண்டிருப்பர். அமெரிக்கப் பயனர்களின் தனிப்பட்டத் தரவுகளைப் பாதுகாக்கும் பொறுப்பும் இவர்களுக்கு உண்டு.
வால்மார்ட் 12.5 விழுக்காட்டுப் பங்குகளை டிக்டாக் குளோபல் நிறுவனத்தில் கொண்டிருக்கும்.
அமெரிக்காவில் டிக்டாக் சுமார் 100 மில்லியன் பயனர்களைக் கொண்டிருக்கிறது. கொவிட்-19 காரணமாக இல்லங்களில் முடங்கியிருந்த மக்களிடையே டிக்டாக்கின் பயன்பாடு மேலும் அதிகரித்தது.