கோலாலம்பூர்: விரைவில் நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் தக்கியுடின் ஹசான் தெரிவித்தார்.
இருப்பினும், மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா எப்போது நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்ற சரியான தேதி உத்தரவிடவில்லை என்று அவர் கூறினார்.
“மாமன்னர் எப்போது என்று சொல்லவில்லை, ஆனால் விரைவில். நம் பிரதமர் கூட மாதம் 9 அல்லது 10 -வது மாதம் என்று கூறினார். இப்போது நாம் 6-ஆம் மாத இறுதியில் இருக்கிறோம். 7,8,9 மாதங்களில் நிச்சயமாக நடைபெறும்,” என்று நேற்று அவர் கூறினார்.
அரசியல் கட்சித் தலைவர்கள், 2021 அவசரகால சிறப்புக் குழு மற்றும் அரசு நிறுவன நிபுணர்களின் விளக்கங்கள் அனைத்தையும் பின்பற்றி கூடிய விரைவில் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் என்று மாமன்னர் கருத்து தெரிவித்தார்.
இதற்கிடையில், நாடாளுமன்றம் மீண்டும் கூடும்போது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் -19 தொடர்பான பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று தக்கியுடின் கூறினார்.