Home நாடு வேலாயுதம் விவகாரம் – மலேசியர் கைது! இரு அந்நியத் தொழிலாளர்கள் மீட்பு!

வேலாயுதம் விவகாரம் – மலேசியர் கைது! இரு அந்நியத் தொழிலாளர்கள் மீட்பு!

815
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா : இந்தியாவிலிருந்து வந்து இங்கு பெட்டாலிங் ஜெயா உணவகம் ஒன்றில் பணியாற்றி, அங்கு தனக்கு நேர்ந்த கொடுமையான அனுபவங்களை தமிழகத்தின் இணைய ஊடகம் ஒன்றுக்கு பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் இலட்சுமி இராமகிருஷ்ணனுக்கு நேர்காணலாக வழங்கியதன் மூலம் சமூக ஊடகங்களில் பிரபலமாகியிருக்கிறார் வேலாயுதம் என்ற நபர்.

அவரின் அடுக்கடுக்கானப் புகார்களைத் தொடர்ந்து மஇகா இளைஞர் பகுதி காவல் துறையில் புகார் ஒன்றையும் செய்திருந்தது.

விவரம் அறிந்து உடனடியாக செயலில் இறங்கிய மனித வள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன் நேற்று சனிக்கிழமை யூடியூப் தளத்தின் வழி, நிகழ்ச்சி தொகுப்பாளர் இலட்சுமி இராமகிருஷ்ணனனிடமும், புகார் கொடுத்த வேலாயுதத்திடமும் இயங்கலை வழி உரையாடினார். விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டதோடு, தனது தரப்பு வாதத்தையும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும், மனித வள அமைச்சின் சார்பிலும் முன் வைத்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் தமிழ் நாட்டிலும், மலேசியாவிலும் பெரும் சர்ச்சைகளை எழுப்பியிருக்கிறது.

காவல்துறை புகார்களைத் தொடர்ந்து பெட்டாலிங் ஜெயா காவல் துறை உடனே நடவடிக்கையில் இறங்கி சம்பந்தப்பட்ட உணவகத்தின் முன்னாள் நிர்வாகி எனக் கருதப்படும் மலேசியர் ஒருவரைக் கைது செய்திருக்கிறது.

சம்பந்தப்பட்ட உணவகத்தின் முன்னாள் மேலாளர் எனக் கருதப்படுபவர் அந்த மலேசியர் 33 வயதுக்காரர் என்றும் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தின் தலைவர் முகமட் பக்ருடின் அப்துல் ஹாமிட் அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்திருக்கிறார்.

அந்த மலேசியர் மீது ஏற்கனவே 6 தண்டனைக் குற்றங்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குற்றங்கள் குற்றவியல் சம்பவங்கள், போதைப் பொருள் சம்பவங்களோடு தொடர்பு கொண்டவையாகும்.

கைதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மலேசிய நபர் ஜூன் 24 வரை விசாரணைக்காக 6 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.மனிதக் கடத்தல் மற்றும் அந்நியத் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் அந்த உணவகத்தில் இருந்த இரண்டு இந்திய நாட்டு அந்நியத் தொழிலாளர்களையும் காவல் துறை மீட்டிருக்கிறது. அதில் ஒருவர் 22 வயதானவர் என்றும் மற்றொருவர் 34 வயதுக்காரர் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அந்த இருவரும் ஆண்கள் காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி இராமகிருஷ்ணன் நேர்கொண்ட பார்வை என்ற நேர்காணல் நிகழ்ச்சி மூலம், வேலாயுதத்தை பேட்டி காண அதைத் தொடர்ந்து வெளியே கொண்டுவரப்பட்டிருக்கும் பல விவகாரங்கள் பொதுமக்களின் சர்ச்சைக்குரிய விவாதப் பொருளாகியிருக்கின்றன.

இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 20) மலேசியப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டிருக்கும் மேலும் சில தகவல்கள் இந்த விவகாரத்தில் சில திருப்பங்களை ஏற்படுத்தியிருக்கின்றன.

வேலாயுதம் சொல்வது பொய் என்கிறார், புகார் சுமத்தப்பட்டிருக்கும் ரவீந்திரன் என்ற உணவக நிர்வாகி. மலேசிய இந்திய உணவகங்களின் சங்கமும் விசாரணையில் இறங்கியிருக்கிறது.

இந்த சூழ்நிலையில்தான் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தின் அதிரடி நடவடிக்கை மூலம் சம்பந்தப்பட்டவரின் கைதும் இரண்டு அந்நியத் தொழிலாளர்களின் மீட்பும் நிகழ்ந்திருக்கிறது.

தொடர்புடைய செல்லியல் காணொலி :