கோலாலம்பூர் : 25 தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைத் தான் இழந்து விட்டதாக எழுந்துள்ள கூற்று “கார்ட்டூன்” போன்ற கோமாளித்தனமானது என அம்னோ தேசியத்தலைவர் டத்தோஸ்ரீ சாஹிட் ஹாமிடி கிண்டலடித்துள்ளார்.
அம்னோவின் தேசியத் தலைவரும், தேசிய முன்னணியின் தலைவருமான சாஹிட் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழந்துவிட்டார் என பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் கூறியிருந்தார்.
தேசிய முன்னணி என்று வரும்பொழுது தற்போது 41 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்தக் கூட்டணியில் இருக்கின்றார்கள். அதில் 25 பேர் அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான ஹிஷாமுடின் ஹூசேன் ஓன் அடுத்த பிரதமராக சத்தியப் பிரமாணங்களில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்றும் நஸ்ரி கூறியிருந்தார்.
ஆனால் இந்த சத்தியப் பிரமாணக் கடிதங்கள் பிரதமர் மொகிதின் யாசினை பதவியிலிருந்து அகற்றுவதற்கோ, அல்லது அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கோ அல்ல என்றும் நஸ்ரி தெளிவுபடுத்தியிருந்தார்.
கடந்த ஆண்டு அன்வார் இப்ராகிமை பிரதமராக்க அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற கடிதத்தை அம்னோ தலைவர் என்ற முறையில் மாமன்னரிடம் சாஹிட் வழங்கியிருந்தார். அதன்பிறகு அந்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது.
அடுத்த 14 நாட்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என ஆளும் தேசியக் கூட்டணிக்கு சாஹிட் ஹாமிடி கெடு விதித்ததைத் தொடர்ந்து தேசிய முன்னணியின் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை அவர் இழந்து விட்டார் என்ற தகவலை நஸ்ரி வெளியிட்டிருந்தார்.