Home நாடு மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? – டத்தோ மு.பெரியசாமி கண்ணோட்டம்

மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? – டத்தோ மு.பெரியசாமி கண்ணோட்டம்

516
0
SHARE
Ad

(மலேசிய அரசாங்கத்தின் தகவல் துறை இலாகாவில் நீண்ட காலம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் டத்தோ மு.பெரியசாமி. தற்போது அரசு சேவையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவர், பினாங்கு மாநில தகவல் இலாகாவின் முன்னாள்  இயக்குனர், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை இயக்குனர், தகவல் அமைச்சின் சிறப்புப் பிரிவின் முன்னாள் ஊடக வியூக ஆலோசகர் என பல பொறுப்புகளை வகித்தவர்.  அரசியல் ஆய்வாளர். “மொகிதின் யாசின் தலைமைத்துவத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்படுமா?” என்ற கோணத்தில் அவர் வழங்கும் அரசியல் பார்வை, இந்தக் கட்டுரை)

கோவிட் 19 தொற்று நோயினால் அவதியுறும் நாட்டு மக்களின் பிரச்சனைகளையும் நாட்டில் சுணக்கம் கண்டு வரும் பொருளாதாரப் பிரச்சனையை அலசி ஆராய்ந்து தீர்வு காண்பதற்கும் நாடாளுமன்றத்தை விரைவில் கூட்ட வேண்டுமென மேன்மை தங்கிய மாமன்னர் சமீபத்தில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

கட்டுரையாளர் டத்தோ மு.பெரியசாமி

பிரதமரும், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்றம் கூட்டப்படலாம் என அறிவித்திருந்தாலும் நாடாளுமன்றம் வெகு விரைவில் கூடுவதற்குச் சாத்தியமில்லை.

#TamilSchoolmychoice

காரணம், நாடாளுமன்றக் கூட்டச் சட்டத் திட்டங்களின்படி 28 நாட்களுக்கு முன் கூட்ட அழைப்புக்கான அறிக்கை வெளியிடப்பட வேண்டும். இந்தக் கூட்ட அழைப்பு அறிக்கையை வெளியிடுவதற்குப் பல தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியிருப்பதால் நாடாளுமன்றக் கூட்டம் செப்டம்பருக்குள் கூடுவதற்கு சற்றுக் காலதாமதமாகலாம்.

நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் மொகிதின் யாசின் தலைமைத்துவத்தின் மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவிருப்பதாகப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லையெனக் கருதி இந்நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் எனப் பேசப்பட்டு வருகிறது.

ஆனால், நாடாளுமன்றம் கூட்டப்பட்டால் பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கும் சாத்தியம் தென்படவில்லை. ஏனென்றால் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு நாடாளுமன்றத்தில் பரிந்துரை சமர்ப்பிக்கப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்பட்டப் பரிந்துரையை நாடாளுமன்ற அவைத் தலைவர் ஏற்றுக் கொண்டு நாடாளுமன்றக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் இடம்பெறச் செய்ய வேண்டும்.

மேலும், இப்போதைய நாடாளுமன்ற அவைத்தலைவர் பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் தேசியக் கூட்டணி அரசாங்கத்தின் நியமனத்தினால் அந்தப் பதவியில் இருப்பவர்.

எனவே, அவரே தேசியக் கூட்டணி தலைமைத்துவத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வர முன் வருவாரா?

அப்படியே, முன்வந்தாலும், பிரதமருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லையென நிரூபிக்கத் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் சாத்தியமில்லையென்றே கருதலாம்.

காரணம், தற்சமயம் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியான தேசிய முன்னணி, பிரதமர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர மாட்டோம் என அறிக்கை வெளியிட்டதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

அதே வேளையில் இதர கட்சிகளான பாஸ்,பெர்சத்து மற்றும் சரவாக் ,சபா மாநிலத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களும் மொகிதின் யாசினுக்கும் அவர் தலைமை தாங்குகின்ற தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கும் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே சொல்லி வருகின்றன.

மேற்கூறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் இருப்பதால் பிரதமர் மொகிதின் யாசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவது சாத்தியப்படுமா என்பது சந்தேகமே!

-டத்தோ மு.பெரியசாமி