கோலாலம்பூர் : ஜனநாயக செயல்கட்சியில் நீண்ட காலமாக ஈடுபாடு கொண்டவரும், மறைந்த மக்கள் தொண்டன் வி.டேவிட்டின் அரசியல் தொண்டராக நாடெங்கிலும் அறியப்பட்டவருமான டேவிட் பாலா நேற்று ஆகஸ்ட் 31-ஆம் நாள் காலமானார்.
வி.டேவிட்டுடன் நெருக்கமாக இருந்த காரணத்தாலும், அரசியல் பணியாற்றியதாலும், அவர் அரசியல் வட்டாரங்களில் டேவிட் பாலா என்றே அழைக்கப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தலைநகர் பங்சார் வட்டாரத்தில் உணவகம் நடத்தி, அந்த உணவகத்தில் விதம் விதமான, வித்தியாசமான இரகங்களில் தோசை உணவை வழங்கினார். அதன் காரணமாக, அவர் நெருக்கமான நண்பர்களால், “தோசை பாலா” என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
ஜசெகவில் தீவிர ஈடுபாடு காட்டியவர் டேவிட் பாலா. ஜசெகவின் அனைத்துக் கட்டத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர்.
அதே வேளையில், அவருக்கு எல்லாக் கட்சிகளிலும் நண்பர்கள் இருந்தார்கள். அவரிடம் பாசத்துடனும் மரியாதையுடனும் பழகினார்கள்.
நட்பு என்று வரும்போது அவர் மற்ற கட்சிகளில் இருந்த முக்கியப் பிரமுகர்களையும் நன்கு அறிந்து வைத்திருந்தார். அவர்களின் பின்புலங்களையும் தெரிந்து வைத்திருந்தார். அவர்களை நேரில் சந்திக்கும்போது அவர்களைப் பற்றிய விவரங்களைக் கூறி ஆச்சரியத்தில் ஆழ்த்துவார்.
ஒருமுறை முன்னாள் பிரதமர் துன் மகாதீர் கூட பாலாவின் உணவகத்திற்கு வருகை தந்து உணவருந்தி மகிழ்ந்தார்.
டேவிட் பாலாவின் மறைவு அவரின் நண்பர்கள் குழாமில் நிச்சயம் ஒரு வெற்றிடமாகத்தான் நீண்ட நாட்களுக்கு இருந்து வரும்.
-இரா.முத்தரசன்
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal