Home நாடு அசாம் பாக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பங்சாருக்கு இடம் மாற்றம்

அசாம் பாக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் பங்சாருக்கு இடம் மாற்றம்

812
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஊழல் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கிக்கு எதிராக நாளை சனிக்கிழமை (ஜனவரி 22) தலைநகரில் கண்டனப் பேரணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மானில் உள்ள சோகோ பேரங்காடியின் முன்னால் நடைபெறும் என இந்தப் பேரணி முதலில் அறிவிக்கப்பட்டது.

தற்போது ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான காவல் துறையினரின் கெடுபிடிகளைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்கான மையம் பங்சார் எல்ஆர்டி நிலையம் என பேரணியின் ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர்.

#TamilSchoolmychoice

இந்தக் கண்டனப் பேரணியில் 33 அரசு சாரா இயக்கங்களும் 11 அரசியல் கட்சிகளும் பங்கு கொள்ளவிருக்கின்றன,

அசாம் பாக்கி மீது கோலாலம்பூரிலுள்ள ஜாலான் டாங் வாங்கி காவல் நிலையத்தில் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் வரிசையாகப் புகார்கள் செய்துள்ளனர்.

இந்தப் புகார்களை காவல் துறை, பங்குச் சந்தை ஆணையத்திற்கு மேல் விசாரணைக்காக அனுப்பி வைத்தது. மலேசிய பங்குச் சந்தை ஆணையம் சட்டங்களின்படி அசாம் பாக்கி விசாரிக்கப்படுவதாக புக்கிட் அமான் குற்றவியல் பிரிவின் (சிஐடி- CID) இயக்குநர் அப்துல் ஜாலில் ஹாசான் தெரிவித்தார்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கிக்கு எதிராகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

இதைத் தொடர்ந்து பல்முனைகளிலும் அவருக்கு எதிரான கண்டனக் குரல்களும் நடவடிக்கைகளும் எழுந்திருக்கின்றன. அவர் மீதான விசாரணை இடையூறுகளின்றி நடைபெற, அவர் தனது பதவியில் இருந்து விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற அறைகூவல்களும் எழுந்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்வுக் குழுவும் அவர் மீதான புகார்களை விசாரிக்கவிருக்கிறது.

ஏறத்தாழ 2 மில்லியன் பங்குகளை அசாம் பாக்கி வைத்திருக்கிறார் என்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து, எப்படி வந்தது அவருக்கு இந்தப் பணம்? ஓர் அரசாங்க ஊழியரான அவர் இந்தப் பங்குகள் வைத்திருப்பதை அரசாங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை, ஊழல் தடுப்பு மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வந்த பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரென்ஸ் கோமஸ், அசாம் பாக்கி மீதான புகார்கள் தொடர்பில் தனது பதவியிலிருந்து விலகினார்.

இந்நிலையில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை, ஊழல் தடுப்பு மன்றம் விடுத்த அறிக்கையில் அசாம் பாக்கியின் சகோதரரே அந்த பங்குகளை வைத்திருக்கிறார் என்றும் அசாம் பாக்கி தவறுகள் ஏதும் இழைக்கவில்லை என்றும் அறிவித்தது.

அந்த அறிக்கையும் சர்ச்சைகளுக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை, ஊழல் தடுப்பு மன்றத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆலோசனை மன்றத்தின் தலைவர் அபு சாஹாரின் அறிக்கையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.

அசாம் பாக்கி மீதான புகார்களை விசாரித்த பங்குப் பரிவர்த்தனை ஆணையம், பங்குக் கணக்குகளை அசாம் பாக்கியே நேரடியாகக் கையாண்டிருப்பதால் அவர்மீது குற்றம் ஏதும் நிரூபணமாகவில்லை எனத் தெரிவித்தனர்.