Home நாடு லோ சியூ ஹோங்: 3 பிள்ளைகளுடன் இணைந்தார் – அடுத்த கட்டப் போராட்டம், ஒருதலைப்பட்ச மத...

லோ சியூ ஹோங்: 3 பிள்ளைகளுடன் இணைந்தார் – அடுத்த கட்டப் போராட்டம், ஒருதலைப்பட்ச மத மாற்றம்

1038
0
SHARE
Ad

கோலாலம்பூர் : தன் 3 குழந்தைகளை மீட்கும் முயற்சியில் தனித்து வாழும் தாயாரான லோ சியூ ஹோங் இன்று நீதிமன்ற வழக்கில் வெற்றியடைந்தார். புத்த மதத்தைச் சார்ந்தவரான லோ, இனி ஒருதலைப்பட்ச மதமாற்றம் செய்யப்பட்ட தன் 3 குழந்தைகளின் மதமாற்றம் செல்லாது என்ற சட்டப் போராட்டத்தைத் தொடரவிருக்கிறார்.

கணவனால் பல்வேறு குடும்பத் தொல்லைகளை எதிர்நோக்கிய லோ சியூ ஹோங், தன் வாழ்க்கையின் அடுத்த கட்டப் போராட்டமாக இந்த மதமாற்ற விவகாரத்தைத் தொடரவிருக்கிறார்.

இன்று திங்கட்கிழமை (பிப்ரவரி 21) அவரின் ஹேபியஸ் கோர்ப்பஸ் என்னும் ஆட்கொணர்வு மனு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

சமூக நல இலாகா, மற்றும் அந்த 3 பிள்ளைகளை ஒரு காலகட்டத்தில் தனது பராமரிப்பில் வைத்திருந்த மத போதகர் நசீரா நந்தகுமாரி அப்துல்லா ஆகியோருக்கு எதிராக லோ இந்த வழக்கைத் தொடுத்திருந்தார்.

அந்த வழக்கை விசாரித்த  கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுயிரா, லோவின் முறையீட்டு மனுவை ஏற்றுக்கொண்டு 3 குழந்தைகளையும் அவருடன் சேர்க்கும் உத்தரவைப் பிறப்பித்தார்.

ஏற்கனவே, லோ சியூ ஹோங் தன் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ உயர் நீதிமன்றம் 31 மார்ச் 2021-இல் நீதிமன்றத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

அந்த நீதிமன்ற உத்தரவு இன்னும் செல்லுபடியாகும் என்பதால் தற்போது சமூக நல இலாகாவில் வைக்கப்பட்டிருக்கும் அந்த 3 குழந்தைகளும் லோவுடன் சேர்ந்து வாழ அனுமதிக்கப்படுகின்றனர்.

அதுமட்டுமின்றி தன் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதியிட்ட நீதிமன்ற உத்தரவையும் ஏற்கனவே லோ பெற்றுள்ளார்.

இன்றைய நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சில ஆவணங்களில் கையெழுத்திட்ட பின்னர் லோ தன் 3 குழந்தைகளுடன் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறினார்.

2019-இல் தனது கணவரால் தாக்கப்பட்டதாகவும், அந்தக் காயங்களால் பாதிக்கப்பட்டதாகவும் லோ தெரிவித்திருக்கிறார்.

லோவின் முன்னாள் கணவர் நாகேஸ்வரன் போதைப் பொருள் குற்றத்திற்காக தற்போது சிறையில் இருந்து வருகிறார்.

லோ நடத்திய சட்டப் போராட்டத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி ஆதரவாகச் செயல்பட்டார். சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி, செபராங் பிறை மாநகர் மன்ற உறுப்பினர் டேவிட் மார்ஷல் ஆகியோரும் தீவிரப் பங்காற்றினர்.

லோ தன் பிள்ளைகளின் மத மாற்றத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார் என்றும் நம்பப்படுகிறது.