Home Photo News சாஹிட் ஹமிடி விரிக்கும் வலையில் இஸ்மாயில் சப்ரி சிக்குவாரா?

சாஹிட் ஹமிடி விரிக்கும் வலையில் இஸ்மாயில் சப்ரி சிக்குவாரா?

763
0
SHARE
Ad

(15-வது பொதுத் தேர்தலில் அம்னோ, பிரதமர் வேட்பாளராக இஸ்மாயில் சாப்ரியையே முன்னிருத்தும் என்ற அதிரடி முடிவை எடுத்திருக்கிறது அம்னோ உச்சமன்றம். இது இஸ்மாயில் சாப்ரிக்கு உண்மையிலேயே விரிக்கப்படும் சிவப்புக் கம்பளமா அல்லது அவரைச் சிக்க வைக்கும் வலை விரிப்பா? தன் பார்வையை வழங்குகிறார் இரா.முத்தரசன்)

இது நாள் வரையில் அம்னோவில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதற்கான தேர்வில் மோதல்கள் நிகழும்– கட்சியே பிளவுபடலாம் – என்னும் அளவுக்கு ஆரூடங்கள்
நிலவிவந்தன.

ஆனால்,  யாரும் எதிர்பாராதவிதமாக சில நாட்களுக்கு முன்னால் தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் இஸ்மாயில் சப்ரிதான் என்ற ஆச்சரியகரமான முடிவை அம்னோ உச்சமன்றம் எடுத்தது.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து அம்னோவில்  ஒற்றுமை நிலவுவது போலவும் அனைவரும் ஒருமித்தக் கருத்துடன் இஸ்மாயில் சப்ரியை முன்னிருத்தி 15ஆவது பொதுத் தேர்தலை சந்திக்கப் போவது போலவும் ஒரு தோற்றம் மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அரசியல் ரீதியாக உன்னிப்பாகப் பார்த்தால் சாஹிட் ஹமிடி – நஜிப் அணியினரின் அபாரமான வியூகமாகவும் பொதுத் தேர்தலை விரைந்து நடத்த பிரதமருக்குத் தரப்படும் நெருக்குதலாகவும்  இதைப் பார்க்கலாம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இஸ்மாயில் சப்ரியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதன் மூலம், அவருக்கு ஆசை காட்டி பொதுத் தேர்தலை முன்கூட்டியே வைப்பதற்கான திட்டத்தை சாஹிட் அணியினர் வகுத்திருப்பதும் தெளிவாகத்
தெரிகிறது.

எல்லோருக்கும்  தெளிவாகத் தெரியும் இந்த அரசியல் வியூகம் இஸ்மாயில் சப்ரிக்கு மட்டும் தெரியாமலா இருக்கும்?

சாஹிட் அணியினர் விரித்திருக்கும்  வலைப் பின்னலில் இஸ்மாயில் சப்ரி சிக்கிக் கொள்வாரா? சாமர்த்தியமாக எப்படி அந்தக் கிடுக்கிப் பிடியிலிருந்து வெளிவரப் போகிறார் என்பதுதான் மலேசிய அரசியலின் அடுத்த கட்ட சுவாரஸ்யம்.

நாடாளுமன்ற வேட்பாளர்கள் நியமனத்தில் அம்னோ தலைவருக்கே அதிகாரம்

முகமட் ஹாசான் – சாஹிட் ஹாமிடி

15ஆவது பொதுத் தேர்தலை அம்னோ ஒரு வித்தியாசமான முறையில் சந்திக்கிறது.

வழக்கமாக அம்னோவில் தேசியத் தலைவர் யாரோ, அவரே தேசிய முன்னணியின் தலைவராகவும் இருப்பார். அவரே பிரதமராகவும் செயல்படுவார்.

எனவே, அரசியல் ரீதியிலான முடிவுகள் எடுப்பதில் இதுவரையில் சிக்கல்கள் நேர்ந்ததில்லை. ஆனால், இப்போது அதற்கு நேர்மாறான நிலைமை.

இஸ்மாயில் சப்ரி இப்போதைக்கு அம்னோவின் உதவித்தலைவர் மட்டுமே! ஆனால், பிரதமராக இருக்கிறார். அம்னோ தலைவரான சாஹிட் ஹமிடி தேசிய முன்னணி
தலைவராகவும் செயல்படுகின்றார்.

எனவே, பொதுத் தேர்தல் நடைபெற்றால் நாடாளுமன்ற உறுப்பினர்களாக போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுக்கும் இறுதி முடிவு அதிகாரம் அம்னோ தலைவர் என்ற முறையில் சாஹிட் ஹமிடியிடமே இருக்கும்.

இஸ்மாயில் சப்ரி பிரதமராக இருந்தாலும் அவர் முன்மொழியும் நாடாளுமன்ற வேட்பாளர்களை சாஹிட் நிராகரிக்க முடியும்.

தேசிய முன்னணி தலைவர் என்ற முறையில்  சாஹிட் யாரை வேட்பாளராக பரிந்துரை செய்து வேட்புமனுத் தாக்கலில் கையெழுத்திடுகிறாரோ அவரே தேர்தலில்
போட்டியிடுவார்.

எனவே, இஸ்மாயில் சப்ரி பிரதமர் வேட்பாளர் என்ற அந்தஸ்தைக் கொண்டிருந்தாலும் அவருக்கு வேண்டிய ஆதரவாளர்களை நாடாளுமன்ற உறுப்பினராக
அவரால் கொண்டு வர முடியாது.

பொதுத் தேர்தல் முடிந்ததும் தனக்கு வேண்டிய பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு சாஹிட், எளிதாக இஸ்மாயில் சாப்ரிக்கு பதிலாக
வேறொருவரைப் பிரதமராகக் கொண்டு வந்து விடலாம்.

இதனால்தான் பொதுத் தேர்தலை அடுத்த ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் – அதாவது நடப்பு நாடாளுமன்றத்தின் முழுத் தவணைக் காலம் முடிந்ததும் – நடத்துவதற்கு இஸ்மாயில் சப்ரி அணியினர் வியூகம் வகுத்து செயல்பட்டு
வந்தனர்.

அம்னோ தேர்தலை முதலில் நடத்திவிட்டால் அதன் மூலம் கட்சியில் அம்னோ தலைவர் பதவியை கைப்பற்றி விடலாம் என இஸ்மாயில் சப்ரி தரப்பினர் நம்புகின்றனர்.

அம்னோ தேர்தலுக்குப் பின்னர், பொதுத் தேர்தலை நடத்துவதே தங்களுக்குச் சாதகமாக இருக்கும் எனவும் இஸ்மாயில் சப்ரி அணியினர் உறுதியாக
நம்புகின்றனர்.

சாஹிட் ஹாமிடியின் மாற்று வியூகம்

சாஹிட் ஹாமிடியோ இஸ்மாயில் சாப்ரி அணியினரின் திட்டத்தை முறியடிக்க மாற்று வியூகத்தோடு முனைந்துள்ளது நன்கு தெரிகிறது.

முதலில் பொதுத் தேர்தலை நடத்தி தங்களுக்கு வேண்டிய நாடாளுமன்ற– சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பளித்து – அதன் மூலம் கட்சியில் தங்களுக்கான இடத்தைப் பலப்படுத்திக் கொள்ள சாஹிட்-நஜிப் அணியினர் முனைந்துள்ளனர்.

இந்த மோதல்களில்னால் இஸ்மாயில் சப்ரி பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டார் என்ற ஆரூடங்கள் நிலவின.

அதை முறியடிக்கும் விதத்திலும் அம்னோவில் ஒற்றுமை நிலவுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் சாஹிட் ஹமிடி இஸ்மாயில் சப்ரியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் முடிவை அம்னோ உச்சமன்றம் மூலமாக
எடுத்துள்ளார்.

அண்மையில் ஜோகூர் தேர்தலில்  அம்னோ தேசிய முன்னணியின் ‘போஸ்டர் போய்’ (Poster Boy) என முன்வைக்கப்பட்ட முன்னாள் மந்திரி பெசார் ஹஸ்னி முகமட்
தேர்தல் முடிந்ததும் மாற்றப்பட்டார்.

இதற்குக் காரணம் சுல்தானா அல்லது கட்சித் தலைமைத்துவமா என்ற விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் பிரதமர் வேட்பாளராக  இஸ்மாயில் சப்ரி அறிவிக்கப்பட்டாலும் தேர்தல் முடிந்ததும் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சாஹிட்டின்
ஆதரவாளர்களாக இருந்தால் ஜோகூர் மந்திரி பெசாரைப் போல இஸ்மாயில் சாப்ரியும் மாற்றப்படும் நிலைமை ஏற்படலாம்.

எனவே,  அம்னோ கட்சித் தேர்தல் முதலில் நடத்தப்பட்டு  அதன் மூலம் தேசியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டு – அந்த தேசியத் தலைவரே தேசிய முன்னணி தலைவராகவும்  – பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்தப்பட்டால்தான்
-குழப்பங்கள் இன்றி அம்னோ தேர்தலை சந்திக்க முடியும்.

இஸ்மாயில் சப்ரி, சாஹிட்டின் வலையில் விழுவாரா அல்லது நாடாளுமன்றத்தைக் கலைக்காமல் முழுத் தவணை முடியும் வரை பொதுத் தேர்தலை நீட்டித்துக் கொண்டு செல்வாரா?

காத்திருப்போம்.

இரா.முத்தரசன்