சிங்கப்பூர் : அனைத்துலகக் கண்டனங்களையும் மீறி, மலேசியர்களின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், ஏற்கனவே நிர்ணயித்தபடி சிங்கப்பூரில் நாகேந்திரன் தர்மலிங்கம் இன்று காலை தூக்கிலிடப்பட்டார்.
ஹெரோய்ன் போதைப் பொருள் கடத்தலுக்காக குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட நாகேந்திரன் கடந்த 10 ஆண்டுகளாக தூக்குத் தண்டனைக்காகக் காத்திருந்தார்.
பல முறையீடுகள், நீதிமன்ற வழக்குகள் மூலம் அவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கும் போராட்டங்கள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
இறுதி முயற்சியாக நாகேந்திரனின் தாயார் தொடுத்த வழக்கையும் நேற்று செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 26) சிங்கப்பூரின் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
34 வயதான நாகேந்திரன் அறிவு வளர்ச்சி குன்றியவர் என்பதால் அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படக் கூடாது என பல அமைப்புகள் தொடர்ந்து போராடி வந்தன.
மலேசியரான நாகேந்திரனுக்கு ஆதரவாக மலேசிய வழக்கறிஞர் சுரேந்திரன் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தார்.
பிரிட்டனின் பிரபல வணிகப் பிரமுகர் ரிச்சர்ட் பிரான்சனும் நாகேந்திரனுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார்.