புத்ரா ஜெயா : இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் வாடிக்கையாளர்களுக்கு 5-ஜி அகண்ட அலைவரிசை தொழில்நுட்பம் படிப்படியாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தகவல் தொடர்பு பல்ஊடக அமைச்சர் அனுவார் மூசா தெரிவித்தார்.
டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தில் (DNB – டிஎன்பி) பங்குகளை எடுத்துக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் ஆறாவது நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட ஆறு நிறுவனங்களும் டிஎன்பியில் பங்குகளை வைத்திருக்க ஒப்புக்கொண்டதாகவும், ஒப்பந்தத்தை தொடர்ந்து விலை மற்றும் பல விவகாரங்களில் இறுதி பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
“இன்னும் ஒரு வாரத்தில், ஜூலை 8 ஆம் தேதிக்குள், சில ஆவணங்களில் கையொப்பமிடுவதன் மூலம் அது முறைப்படுத்தப்படும் என்று நம்புகிறோம், இதனால் செப்டம்பர் மாதத்திற்குள் வாடிக்கையாளர்கள் 5ஜி சேவையின் வெளியீட்டைப் பெற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று தகவல் தொடர்பு பல்ஊடக அமைச்சகம், நிதி அமைச்சகம், மலேசிய தகவல் தொடர்பு பல்ஊடக ஆணையம், டிஎன்பி உடனான 5-ஜி (5G) மாநாட்டில் அவரிடம் கருத்து கேட்கப்பட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஒரே மொத்த விற்பனை வலையமைப்பு (SWN) மாதிரியை மாற்ற வேண்டும் என்ற நிர்ணயம் குறித்த மேல்முறையீட்டின் காரணமாக பல மாதங்களாக வெளியீடு தாமதமாகிவிட்டதால், தற்போது அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வு கிடைத்துள்ளதால் மகிழ்ச்சியடைவதாக அனுவார் மூசா கூறினார்.
SWN மாடல் மூலம் நாட்டின் 5G உள்கட்டமைப்பை செயல்படுத்துவதற்காக ஆறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் DNB-யில் பங்குகளைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அனுவார் தெரிவித்திருந்தார்.