நேபிடோ : பதவி நீக்கம் செய்யப்பட்ட மியன்மார் தலைவர் ஆங் சான் சூகியை சிறையில் இருந்து வீட்டுக் காவலில் வைக்க அனுமதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும், ஆனால் அவருக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு வந்த பிறகே அந்த முடிவு எடுக்கப்படும் என்றும் மியான்மர் ராணுவ ஆட்சித் தலைவர் நேற்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 19) தெரிவித்தார்.
கடந்த ஆண்டு உலக அளவில் பரவலாக கண்டனங்களைச் சந்தித்த இராணுவ சதிப்புரட்சியில் பதவியிலிருந்து வீழ்த்தப்பட்ட சூகி, ஜூன் மாதம் தலைநகர் நேபிடாவில் உள்ள சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்று இராணுவம் தெரிவித்துள்ளது. நோபல் பரிசு பெற்றவரும் ஜனநாயகப் போராளியுமான 77 வயது சூகி, கடந்த முப்பதாண்டுகளில் பாதியை வீட்டுக் காவலில் கழித்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர், சூகி மீது ஊழல் முதல் தேர்தல் விதிமீறல்கள் வரை குறைந்தது 18 குற்றங்கள் சுமத்தப்பட்டு ஏற்கனவே பல ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் அந்தக் குற்றச்சாட்டுகளை அபத்தமானது என்று கூறி. தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
இந்த வாரம் மியான்மருக்குச் சென்ற ஐ.நா.வின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் சூகியைத் தனது இல்லத்திற்குத் திரும்ப அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்குப் பதிலளிக்கும் விதமாக, அரச தொலைக்காட்சியில் வாசிக்கப்பட்ட உரையில் இராணுவத் தலைவர் மின் ஆங் ஹிலைங்கின் எழுத்துப்பூர்வமான கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
சூகி மீதான தீர்ப்பு வந்த பிறகு இந்த விஷயத்தை பரிசீலிப்பேன் என அந்த அறிக்கையில் இராணுவத் தலைவர் தெரிவித்துள்ளார். இராணுவத் தலைவர் “நாங்கள் சூகி மீது வலுவான குற்றச்சாட்டுகளை சுமத்தவில்லை. எங்களால் செய்திருக்க முடிந்தாலும் கருணை காட்டினோம்.” எனக் கூறினார்.
மியான்மரின் சுதந்திர வீரரின் மகளான சூ கி, பல ஆண்டுகளாக இராணுவ ஆட்சிக்கு எதிராக பெரும் போராட்டங்களுக்குப் பிறகு 1989 இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். 1991 இல், அவர் ஜனநாயகத்திற்காக பிரச்சாரம் செய்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசை வென்றார், ஆனால் 2010 இல் மட்டுமே வீட்டுக் காவலில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டார்.