சென்னை : தமிழ் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் செந்தில் பாலாஜியின் வழக்கு வெள்ளிக்கிழமை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அவருக்கு ஆதரவாக பிரபல காங்கிரஸ் தலைவரும் வழக்கறிஞருமான கபில் சிபில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது மனைவி மேகலா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை உயர்நீதிமன்ற 3 வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இன்று 2 வது நாளாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் (சொலிசிட்டர் ஜெனரல்) துஷார் மேத்தா வாதிட்டார்.
இருதய நாள அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருக்கும் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிர்வரும் ஜூலை 12 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருக்கிறது.
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.கைதைத் தொடர்ந்து நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு இருதயத்துக்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்பு இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த நீதிபதி வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 14) ஒத்தி வைத்தார்.