கோலாலம்பூர் : “எல்லாத் தலைவர்களும் பேசத் தயங்குகின்ற ஒரு விவகாரத்தை நான் இங்கே ஆணித்தரமாகக் கூற விரும்புகிறேன். ஓர் இந்துவை முஸ்லீமாக மதம் மாற்றும் சடங்களை இந்நாட்டின் பிரதமர் நடத்தி வைத்தது தவறுதான். அதைத் துணிச்சலுடன் கூறுவதற்கு ஒவ்வொரு இந்துவும் முன்வரவேண்டும்” என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற ஷண்மதக் கருத்தரங்கிற்கு தலைமை தாங்கி உரையாற்றும்போது சரவணன் மேற்கண்டவாறு கூறினார்.
“விரைவில் அமைச்சரவை மாற்றங்கள் நிகழக் கூடும் என்ற ஆரூடங்கள் நிலவும் வேளையிலும், எனது சொந்த நலன்களைப் பற்றி கவலைப்படாமல் இந்த வலியுறுத்தலை முன்வைக்க விரும்புகிறேன். ஒரு பிரதமர் இந்த மதமாற்ற சடங்கை முன்னின்று நடத்தியது தவறுதான்” எனவும் சரவணன் கூறினார்.
மலேசியா ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் ஏற்பாட்டில் இன்று ஷன்மத கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.
“சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்ல வேண்டும்.
சமயமும், தமிழும் நமக்கு இரண்டு கண்கள். அனைத்து தமிழ்ப்பள்ளிகளிலும் இந்து சமயக்கல்வி இருப்பதை நாம் உறுதிப்படுத்தவேண்டும். இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம் மற்றும் பொது இயக்கங்கள் அனைத்தும் இதை கோரிக்கையாக முன் வைத்து நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோளாக முன் வைக்கிறேன்” என்றும் சரவணன் கேட்டுக் கொண்டார்.