கோலாலம்பூர் : இன்று செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலமான எழுத்தாளர் சை. பீர் முகமது அவர்களின் மறைவு தமிழ் இலக்கிய நல்லுலகிற்கு மாபெரும் இழப்பாகும் என டத்தோஸ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.
இன்று மறைந்த பீர் முகம்மதுவின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன், பீர் முகம்மது மலேசியத் தமிழ் இலக்கிய உலகுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
“ஒரு குத்தகையாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் பீர் முகம்மது. மலேசியாவில் மட்டுமின்றி தமிழ் நாட்டிலும், தமிழர்கள் வாழும் மற்ற உலக நாடுகளிலும் தன் எழுத்துத் திறனால் அறியப்பட்டவர் – மிகவும் மதிக்கப்பட்டவர் – பீர் முகம்மது. எழுத்தாளராக மட்டுமல்லாமல் ஒரு குத்தகையாளராகவும் குத்தகையாளர் சங்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவர். இந்நாட்டில் குத்தகையாளர் சங்க நலன்களுக்காக பாடுபட்டவர். மணிமன்றப் பாசறையில் இருந்து வந்த சிறந்த சேவையாளர் பீர் முகம்மது” என்றும் சரவணன் புகழாரம் சூட்டினார்.
அன்னாரின் மறைவில் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல் என்றும் சரவணன் தன் முகநூலில் பதிவிட்டார்.