Home நாடு சாஹிட் ஹாமிடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது மலேசிய வழக்கறிஞர் மன்றம்

சாஹிட் ஹாமிடி விடுதலைக்கு எதிராக வழக்கு தொடுக்கிறது மலேசிய வழக்கறிஞர் மன்றம்

467
0
SHARE
Ad

கோலாலம்பூர் : துணைப் பிரதமரும் அம்னோ தலைவருமான சாஹிட் ஹாமிடி மீதான 47 ஊழல் குற்றச்சாட்டுகளை சட்டத்துறை அலுவலகம் மீட்டுக் கொண்டு அவரை விடுதலை செய்திருப்பதற்கு எதிராக மலேசிய வழக்கறிஞர் மன்றம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தின் அந்த தீர்ப்பை மறு சீராய்வு செய்யும்படி மலேசிய வழக்கறிஞர் மன்றம் அந்த வழக்கில் விண்ணப்பித்திருக்கிறது.

கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி சட்டத்துறை தலைவர் வழங்கிய முடிவின் அடிப்படையில் சாஹிட் விடுதலை செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice

அந்த வழக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கப்பட்டது. 77 நாட்கள் விசாரணைகள் நடத்தப்பட்டன. 15 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இறுதியில் சாஹிட்டுக்கு எதிராக முதல் கட்ட வழக்கு சாட்சியங்களோடு நிரூபிக்கப்பட்டு எதிர்வாதம் புரியும்படி அவர் அழைக்கப்பட்டார். அவரின் எதிர்வாத வழக்கு நிறைவடைந்து தீர்ப்பு வழங்கும் தேதி நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சட்டத்துறை தலைவர் சமர்ப்பித்த மறு ஆய்வு விண்ணப்பத்தை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு சாஹிட்டை விடுதலை செய்தது.

“எங்களைப் பொறுத்தவரையில் மலேசிய அரசியலமைப்பு சட்டத்தில் காணப்படும் சட்டவிதி 145(3) – தொடர்பிலான சட்டத்துறைத் தலைவரின் முடிவு என்பது சீர்தூக்கி பார்க்க வேண்டிய முடிவாகும். அந்த சட்டவிதி சட்டத்துறை தலைவருக்கு தன் இஷ்டம் போல் முடிவெடுக்கும் எல்லையற்ற அதிகாரத்தை வழங்கவில்லை. மாறாக அந்த முடிவுக்கு என வரையறையும் கட்டுப்பாடும் நீதி பரிபாலனப்படி சட்டத்துறை தலைவர் நடக்க வேண்டிய அவசியமும் இருக்கிறது” என மலேசிய வழக்கறிஞர் மன்றம் விடுத்த அறிக்கையில் தெரிவித்தது.

மலேசிய வழக்கறிஞர் மன்றத் தலைவரான கேரன் சியா, இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கையில் சாஹிட்டின் வழக்கு தேசிய அளவிலும் பொது வெளியிலும் மக்களுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. காரணம் அதிகாரத்திலும் ஆட்சியிலும் இருக்கும் ஒரு தனி நபரின் நம்பிக்கை மோசடி, லஞ்ச ஊழல், அரசாங்கத் தலைவர்களின் நம்பகத்தன்மை, கள்ளப்பணப்  பரிமாற்றும் ஆகிய அம்சங்களை சாஹிட்டின் வழக்கு உள்ளடக்கியிருந்தது.

மலேசிய வழக்கறிஞர் மன்றம் தொகுத்த வழக்கில் பல்வேறு முடிவுகள் கோரப்பட்டுள்ளன. சட்டத்துறை தலைவரின் முடிவு தவறானது, மலேசிய அரசியல் சாசனத்தின் சட்ட விதி தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது, எனவே சாஹிட் விடுதலை குறித்த சட்டத்துறை தலைவரின் முடிவு செல்லாது என ரத்து செய்யப்பட வேண்டும் – என்ற கோரிக்கைகள் அவற்றில் அடங்கும்.

இதன் தொடர்பிலான அனைத்து ஆவணங்களையும் மலேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கு சட்டத்துறை அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சட்டத்துறை அலுவலகத்தில் சார்வு செய்யப்பட்டிருப்பதாகவும் மலேசிய வழக்கறிஞர் மன்றம் தெரிவித்தது.