Home நாடு விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்து : “ஒற்றுமை விழாவாக பொங்கல் மலரட்டும்”

விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்து : “ஒற்றுமை விழாவாக பொங்கல் மலரட்டும்”

304
0
SHARE
Ad

ஒற்றுமை விழாவாக பொங்கல் மலரட்டும்
மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் பொங்கல் வாழ்த்து

மலேசிய இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் அனைவருக்கும் மலேசிய இந்தியர்களின் அரசியல் தளமான மலேசிய இந்தியர் காங்கிரஸ் பேரியக்கத்தின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் வேளாண் குடிமக்களாக வாழ்ந்த பண்டைத் தமிழர்கள், உழவுத் தொழிலையே முதன்மைத் தொழிலாகக் கொண்டு வாழ்ந்தனர். அந்நாளைய ஆறு பருவங்களுக்கு ஏற்ப உழவுத் தொழிலையும் அதற்கேற்ப தங்கள் வாழ்க்கை முறையையும் தக அமைத்துக் கொண்டு, இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தனர்.

வேளாண்மைத் தொழிலுக்கு துணை நிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக வடிவமைத்த பொங்கல் விழாவை குடும்பமாகவும் சமூகமாகவும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

#TamilSchoolmychoice

காலமெல்லாம் பாடுபடும் தமிழர்கள், தங்களிடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வளர்த்துக் கொள்ளவும் இந்த பொங்கல் திருநாளை வகையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.

மலேசிய இந்தியர்கள் சமூக அளவிலும் மக்கள் தொகை அடிப்படையிலும் ஆண்டுக்கு ஆண்டு சிறுகி வருகிறோம். போதாக் குறைக்கு அரசியல் வழியாகவும் நாம் சிதறுண்டு பிரிந்து நிற்கிறோம்.

நாம் ஒன்றுபட்டு ஒருமித்து விளங்கினால்தான், அரசியல் ரீதியாகவும் இன்னும் பல வகையிலும் அடைய வேண்டிய இலக்கை எட்ட முடியும்; நம் உரிமையையும் நிலை நாட்ட முடியும் என்பதால், இந்த 2024 பொங்கல் பண்டிகை மலேசிய இந்திய சமுதாயத்தில் ஒற்றுமையை இன்னும் வலுப்படுத்த துணை நிற்கட்டும்.