Home இந்தியா ஒடிசா : தமிழர் பாண்டியன் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள மாநிலம்

ஒடிசா : தமிழர் பாண்டியன் அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ள மாநிலம்

362
0
SHARE
Ad
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன்

புவனேஸ்வர் : 2024 இந்தியப் பொதுத் தேர்தல் நடந்து கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில் பல மாநிலங்களின் உட்கட்சி அரசியல் விவகாரங்கள் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியிருக்கின்றன.

அந்த வரிசையில் ஒடிசா மாநிலத்தில் அரசியல் களத்தில் அண்மையக் காலமாக பிரபலமாகி வரும் பெயர் வி.கார்த்திகேயன் பாண்டியன் – சுருக்கமாக வி.கே.பாண்டியன்.

அரசியல் ரீதியாக மாநிலம் முழுமையிலும் பிரபலமாகியிருக்கும் வி.கே.பாண்டியன், தமிழ் நாட்டுக்காரர். ஒடிசா பெண்ணை திருமணம் செய்தவர். கடந்த 25 ஆண்டுகளாக ஒடிசாவில் ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர். அவரின் செயல்பாடுகளும் திட்டங்களும் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கைக் கவர்ந்து விட, அவரைத் தன் தனிப்பட்ட செயல் அதிகாரியாக நியமித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பதவி விலகிவிட்ட பாண்டியன் இப்போது அமைச்சர் அந்தஸ்தில் முதல் அமைச்சரின் முக்கிய செயலாளராக வலம் வருகிறார். அவரின் வயது 49-தான். மாநிலத்தில் பல திட்டங்களை அமுலாக்க வேண்டிய இடத்தில் இருப்பவரும் அவர்தான். எனவே,வெளிமாநிலத்துக்காரர் என அவர் மீது அரசியல் ரீதியான எதிர்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

நவீன் பட்நாயக்கின் கட்சியில் கூட இரண்டாவது நிலையில் பாண்டியன் ஆதிக்கம் செலுத்துகிறார் என்ற கருத்துகள் நிலவுகின்றன.

எனினும் தன்னடக்கத்துடன் எல்லாமே முதலமைச்சர்தான் நான் ஒன்றுமில்லை – வெறும் சேவகன்தான் என்கிறார் பாண்டியன். அரசியல் பிரச்சாரக் கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் அவரின் உரையைக் கேட்க மக்கள் அதிக அளவில் திரள்கிறார்கள் என்பது அவரின் இன்னொரு சிறப்பு. பிஜேடி கட்சியிலும் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டார் பாண்டியன்.

டில்லியில் படித்து பஞ்சாபில் முதலில் பணியில் சேர்ந்தவர். ஒடிசாவைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், ஒடிசா மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.

ஒடிசாவின் முதலமைச்சருக்கு 77 வயதாகிவிட்டதால் அவருக்கு அடுத்து கட்சியிலும் ஆட்சியிலும் தலைமைப் பதவிக்கு வரக்கூடியவர் பாண்டியன் என்ற கருத்தும் வலுத்து வருகிறது.

ஒடிசா மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலும் மக்களவைத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடைபெறுகிறது. மாநில அளவில் 147 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட ஒடிசாவில் நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக பாதித் தொகுதிகளையும் எஞ்சிய தொகுதிகளை மாநிலத்தை ஆளும் பிஜூ ஜனதா தளம் வெற்றி கொள்ளும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு பாண்டியனின் செல்வாக்கு ஒடிசா மாநிலத்தில் மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.