Home இந்தியா ஒடிசா : தமிழர் பாண்டியன் அமைச்சரா? முதலமைச்சரா? அவரின் கட்சி தோல்வியடையுமா?

ஒடிசா : தமிழர் பாண்டியன் அமைச்சரா? முதலமைச்சரா? அவரின் கட்சி தோல்வியடையுமா?

268
0
SHARE
Ad
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன்

புவனேஸ்வர் : ஜூன் 1 முதல் வெளியிடப்பட்டு வரும் இந்தியத் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகளின்படி ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜேடி என்ற பிஜூ ஜனதா தளம் கட்சி சட்டமன்றத் தேர்தலில் தோல்வி காணும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட்டது.

நவீன் பட்நாயக்கின் பிஜேடி கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதும் பொதுவாக எதிர்பார்க்கப்படும் கணிப்பாகும்.

#TamilSchoolmychoice

கடந்த சில வாரங்களாக தமிழர்கள் தமிழ் நாட்டு அரசியல் செய்திகளை விட ஒடிசா மாநில அரசியல் செய்திகளைத்தான் அதிகம் படித்து வருகிறார்கள். காரணம் ஒரு தமிழர் – வி.கார்த்திகேயன் பாண்டியன்!

தமிழ் நாட்டுத் தமிழர்கள்தான் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் தலைவலி என்றால் – தமிழ் நாட்டுக்கு வெளியே இப்போது அத்தகையக் குடைச்சலை அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பவர்  ஒடிசாவில் பாண்டியன்.

2 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும்
ஒடிசா முதல்வர்

வி.கே.பாண்டியன்

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் 2 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுகிறார். இரண்டிலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு. வெற்றி பெறும் தொகுதிகளில் ஒன்றில் இடைத் தேர்தல் நடக்கும்போது அந்தத் தொகுதியில் பாண்டியன் சட்டமன்ற உறுப்பினராகப் போட்டியிடுவார். வெற்றி பெற்றால் அமைச்சராக நியமிக்கப்படுவார். அடுத்தது முதலமைச்சர்தான் என்ற ஆரூடங்கள் ஒடிசாவைத் தாண்டி இந்தியா முழுவதும் தெறிக்கின்றன.

மொழி வாரி மாநிலங்கள் என்பதை விட மொழிவெறி மாநிலங்கள் என்றே இந்திய மாநிலங்களை வர்ணிக்கலாம். எனவேதான், வடநாட்டு ஒடிசா மாநிலத்தில் பெரிய அரசியல் பின்புலமோ, சினிமா பிரபல்யமோ இல்லாத தமிழர் ஒருவர் முதலமைச்சராக முடியுமா? அந்த வரலாற்றுத் திருப்பத்தை ஒடிசா மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்பதைக் காண இந்தியா முழுவதும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நவீன் பட்நாயக்கின் உடல்நலமும்
மோடியின் கரிசனமும்!

மக்களுடன் பிரச்சாரக் களத்தில் பாண்டியன்

ஒடிசாவில் பாஜகவின் ஒட்டுமொத்தத் தாக்குதல்களும் பாண்டியனைக் குறிவைத்துத்தான்! தமிழன் ஒருவனுக்கு ஒடிசாவில் என்ன அரசியல் வேலை என்பது தொடங்கி, பூரி ஜெகன்னநாதர் ஆலயத்தின் கருவூலச் சாவி தமிழ்நாட்டுக்குப் போய்விட்டது என்பது வரை பாண்டியனை நோக்கித்தான் நேரடி- மறைமுகத் தாக்குதல்கள்!

இப்போது புதிதாக இன்னொரு குற்றச்சாட்டு. 77 வயதாகிவிட்ட நவீன் பட்நாயக்கின் உடல் நலக் குறைவு மீது சந்தேகம் இருக்கிறது – மாநிலத்தை பாஜக கைப்பற்றினால் நவீன் பட்நாயக் உடல்நலம் மோசமடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என மோடி பிரச்சாரக் கூட்டமொன்றில் அறிவித்தார்.

அடுத்த நாளே ஊடகங்களுக்குப் பேட்டி தந்தார் நவீன் பாபு (ஒடிசாவில் அப்படித்தான் நவீன் பட்நாயக்கை மரியாதையுடன் அழைக்கிறார்கள்). “நான் நலமுடன் இருக்கிறேன். ஒரு மாதமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்ததை நீங்களே பார்த்திருப்பீர்கள். மோடிக்கு உண்மையிலேயே என் உடல்நலம் மீது அக்கறை இருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் ஒருமுறையாவது என்னை அழைத்து நலம் விசாரித்திருக்கலாம். அப்படி எதுவும் அவர் செய்ததில்லை” என நவீன் பட்நாயக் கொடுத்த பதிலடியில் மோடியின் பிரச்சாரம் சிதைந்தது எனலாம்!

-இரா.முத்தரசன்