Home உலகம் வங்காள தேசக் கலவரத்தில் 114 பேர் பலி!

வங்காள தேசக் கலவரத்தில் 114 பேர் பலி!

261
0
SHARE
Ad

டாக்கா – வங்காளதேசத்தின் உச்ச நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அரசு வேலைகளுக்கான பெரும்பாலான ஒதுக்கீடுகளை (கோட்டா) ரத்து செய்ததைத் தொடர்ந்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன.

மாணவர்கள் தலைமையில் இந்த போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதில் குறைந்தது 114 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

#TamilSchoolmychoice

நீதிமன்றத்தின் மேல்முறையீட்டுப் பிரிவு, ஒதுக்கீடுகளை மீண்டும் அமல்படுத்திய கீழமை நீதிமன்ற உத்தரவை தள்ளுபடி செய்து, அரசு வேலைகளில் 93% தகுதி அடிப்படையில், ஒதுக்கீடு இல்லாமல் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு திறந்திருக்கும் என உத்தரவிட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன.

பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் 2018-இல் ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்திருந்தது, ஆனால் கடந்த மாதம் கீழமை நீதிமன்றம் அதை மீண்டும் அமல்படுத்தியது. இந்த முடிவு போராட்டங்களையும் தூண்டியது. அதைத் தொடர்ந்து அரசாங்கத்தின் அடக்குமுறை இராணுவத்தைக் கொண்டு செயல்படுத்தப்பட்டது.

இந்த கலவரங்களைத் தொடர்ந்து ஊரடங்கு விதிக்கப்பட்டு, அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை நீட்டித்திருக்கிறது.

தலைநகர் டாக்காவின் தெருக்களில் ராணுவ வீரர்கள் ரோந்து சென்றனர். போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படைகளுக்கும் இடையே மோதல்களாக உருவெடுத்த ஆர்ப்பாட்டங்களின் மையமாக டாக்கா இருக்கிறது.

வியாழக்கிழமை (ஜூலை 18) முதல் வங்காளதேசத்தில் இணைய மற்றும் குறுஞ்செய்தி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுக் கூட்டங்களுக்கான தடையை மீறிய போராட்டக்காரர்கள் மீது காவல்துறை அடக்குமுறையை மேற்கொண்டபோது நாடு கலவர பூமியாக மாறியது.

ஊரடங்கு உத்தரவு மாலை 3 மணி (0900 GMT) வரை நீட்டிக்கப்பட்டது. மக்கள் பொருட்களை சேகரிப்பதற்கான இரண்டு மணி நேர இடைவெளிக்குப் பிறகு “நிச்சயமற்ற காலத்திற்கு” ஊரடங்கு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் வங்காளதேசத்தில் உள்ள மலேசிய மாணவர்கள் பாதுகாப்பாக டாக்காவில் உள்ள மலேசியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என மலேசிய வெளியுறவு அமைச்சு அறிவித்தது.