சென்னை : விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமான அளவில் நடைபெற்ற நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் திரளான ரசிகர்கள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் பரபரப்பும், வீரியமும் வீரமும் நிறைந்த உரையொன்றை நிகழ்த்தி தமிழ் நாடு அரசியலில் மேலும் வெப்பத்தைக் கூட்டியுள்ளார் விஜய். அவரை சாதாரணமாக நினைத்த பல கட்சிகளின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளார்.
திமுகவுக்கு எதிராகத்தான் தனது அரசியல் போராட்டம் என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
கடந்த அக்டோபர் 27-ஆம் இந்த மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டை இந்தியத் தொலைக்காட்சிகளும் பல இணைய ஊடகங்களும் நேரலையாக ஒளிபரப்பி பெரும் ஊடக வெளிச்சத்தை விஜய்க்கு தந்துள்ளன.
அதுமட்டுமல்ல மாநாடு முடிந்த பின்னர் கடந்த சில நாட்களாக எல்லா தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் விஜய் அரசியல் குறித்தும் அவரின் மாநாடு குறித்தும்தான் விவாதங்கள் நடத்தப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து தமிழ் நாட்டு அரசியல் களத்தின் பேசுபொருளாகியுள்ளார் விஜய்.
அந்த மாநாட்டில் விஜய்யின் தந்தையாரும் தாயாரும் கலந்து கொண்டதும், அவர்களிடம் ஆசி பெற்றுவிட்டு அவர் தனது உரையை நிகழ்த்தியதும் தமிழக மக்களை ஈர்த்துள்ளது. ஆனால், ஏனோ அவரின் குடும்பத்தினர் மட்டும் யாரும் கலந்து கொண்டதாகத் தெரியவில்லை. தொடங்கும்போதே குடும்ப அரசியல் வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ!
மாநாடு தொடர்பில் சில மரணங்கள் நிகழ்ந்ததும், சிலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதும்தான் சோகம்!