Home நாடு கடாரம்-சோழர்கள்- பெருமை கூறும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

கடாரம்-சோழர்கள்- பெருமை கூறும் பூஜாங் பள்ளத்தாக்கு அருங்காட்சியகம் மீண்டும் திறப்பு!

193
0
SHARE
Ad

சுங்கைப்பட்டாணி: மூன்றாம் நூற்றாண்டு முதல் 12ஆம் நூற்றாண்டு வரையிலான தனித்தன்மை வாய்ந்த மற்றும் சுவாரசியமான தொல்பொருள் சேகரிப்பு மெர்போக் பகுதியில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு குறிப்பிடத்தக்க வரலாற்றுப் பொருட்களின் சேகரிப்பாகும்.

அருங்காட்சியக இயக்குநர் அஸ்ஹர் மொகமட் நூர் கூறுகையில், பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் கண்டுபிடிப்புகளில் மட்டும் கவனம் செலுத்தும் ஒரே அருங்காட்சியகம் இதுவாகும். மேலும் பண்டைய கெடாவின் முக்கியத்துவத்தை விவரிக்கும் பல வரலாற்றுப் பொக்கிஷங்கள் இதில் உள்ளன.

“இந்த அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள தொல்பொருட்களில் பௌத்த மந்திரங்கள் கொண்ட சுங்கை மாஸ் கல்வெட்டு, கணேஷ் கற்சிலை, கற்குடங்கள், போர்சிலைன் என்னும் பீங்கான் தேநீர்க் கலங்கள், தட்டுகள் தொன்மைக் கற்கலன்கள் மற்றும் கண்ணாடி மணிகள் ஆகியவை அடங்கும்.

#TamilSchoolmychoice

அவர் கூறுகையில் அருங்காட்சியகத்தில் இரண்டு காட்சிக் கூடங்கள் உள்ளன. அவை பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அரங்கம் மற்றும் 1840-ஆம் ஆண்டு முதல் தொல்பொருள் தேடுதல் மூலம் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருட்களைக் காட்சிப்படுத்தும் கூடம். மற்றொரு அரங்கம் பூஜாங் பள்ளத்தாக்கு வர்த்தக வரலாற்று அரங்கம் ஆகும், இது பூஜாங் பள்ளத்தாக்கு வர்த்தக கேந்திரமாகிய மலாயா தீவுகள் உள்ளிட்ட பெரிய நாகரிகங்கள் இணைக்கப்பட்ட வர்த்தகப் பொருட்களைக் காட்சிப்படுத்துகிறது.

பூஜாங் பள்ளத்தாக்கு தொல்பொருள் அரங்கம் 2021 அக்டோபர் மாதம் முதல் மேம்பாட்டு பணிகளுக்காக மூடப்பட்டிருந்தது. நாளை சனிக்கிழமை (நவம்பர் 2) பொது மக்களுக்கு இந்த அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்படுகிறது.

“இந்த அரங்கைத் திறப்பதன் மூலம் இந்த அருங்காட்சியகத்தின் மதிப்பை அதிகரிக்க முடியும் என நம்புகிறேன். மேலும் இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு தொல்பொருள் சேகரிப்பை மதிப்பிடக் கூடிய சமூகத்தின் ஒத்துழைப்பை நாம் எதிர்பார்க்கிறோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, அரங்கைத் திறக்கும் நிகழ்வன்று, மாவட்ட அருங்காட்சியகத்தின் மூலம் பூஜாங் பள்ளத்தாக்கு அகழ்வாராய்ச்சி குறித்த சிறப்பு நிகழ்ச்சியை கெடாவின் ஆட்சியாளர் சுல்தான் அல் அமினுல் கரிம் சுல்தான் சலாஹூடின்  திறந்து வைக்கிறார். இந்த சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (நவ 3) வரை நடத்தப்படுகிறது.

“இந்நிகழ்ச்சி கலைமிகு மற்றும் கலாச்சார மரபுடைமை அடிப்படையில் திருவிழா கருத்துடன் வடிவமைக்கப்பட்டதாகும். மேலும் 5,000 பார்வையாளர்கள் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. பூஜாங் பள்ளத்தாக்கைப் பற்றிய சுற்றுலா மற்றும் கல்வி நோக்கத்துடன் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன,” என்றும் அஸ்ஹர் மொகமட் நூர் கூறினார்.

அஸ்ஹரின் கூற்றுப்படி, இந்நிகழ்ச்சி அருங்காட்சியகத்தின் பொது பார்வையாளர்களை 100,000 வரை அதிகரிக்கும் வகையில் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“2025 ஆம் ஆண்டின் கெடா மாநில சுற்றுலாக் கொண்டாட்டத்துடன் ஒத்திசைந்தவாறு சமூக ஊடகங்கள் உள்பட அனைத்து தளங்களிலும் எங்கள் பிரச்சாரத்தை அதிகரிப்போம்,” என்றும் மேலும் கூறினார்.

பூஜாங் பள்ளத்தாக்கு குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் டத்தோ வீ.நடராஜன் விரிவான் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.