Home Photo News டிரம்ப் 276 தேர்தல் வாக்குகள் பெற்று அபார வெற்றி!

டிரம்ப் 276 தேர்தல் வாக்குகள் பெற்று அபார வெற்றி!

343
0
SHARE
Ad
டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிபராகப் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவதை இரண்டு முறை முறியடித்து சாதனை புரிந்திருக்கிறார் டொனால்ட் டிரம்ப். 2016-ஆம் ஆண்டில் ஹிலாரி கிளிண்டனைத் தோற்கடித்து அமெரிக்காவின் 45-வது அதிபரானார் டிரம்ப்.

ஆனால் 2020 தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். 4 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதிபர் பதவியை அடைய முயற்சி செய்வேன் என சூளுரைத்தார் டிரம்ப். அதன்படியே மீண்டும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) நடைபெற்ற தேர்தலில் வாகை சூடியிருக்கிறார்.

இந்த முறையும் அவர் பெண் அதிபராகக் கூடியவர் எனக் கருதப்பட்ட கமலா ஹாரிசைத் தோற்கடித்திருக்கிறார் டிரம்ப். ஆக, அமெரிக்காவின் பெண் அதிபராகக் கூடிய வாய்ப்பு கொண்ட 2 வேட்பாளர்களைத் தோற்கடித்திருக்கிறார் டிரம்ப்.

#TamilSchoolmychoice

இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி வெற்றிக்குத் தேவைப்படும் 270 வாக்குகளை விட கூடுதலாகப் பெற்றிருக்கிறார் டிரம்ப். அவருக்கு 276 வாக்குகள் கிடைத்த நிலையில் கமலா ஹாரிசுக்கு 223 தேர்தல் வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

அமெரிக்க வரலாற்றில் மற்றொரு சாதனையையும் நிகழ்த்தியிருக்கிறார் டிரம்ப். 78-வது வயதில் அதிபராகியிருப்பது ஒரு சாதனை என்றால், அதிபராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று – பின்னர் 4 ஆண்டுகளுக்குப் பின்னர் தோல்வி கண்டு – மீண்டும் அதிபராக வெற்றி பெற்றிருப்பதும் அவரின் சாதனைகளில் ஒன்று.

அது மட்டுமல்ல! செனட் சபைக்கான தேர்தலிலும் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி வெற்றி பெற்று செனட் என்னும் நாடாளுமன்ற மேலவையில் பெரும்பான்மையைக் கைப்பற்றியிருக்கிறது.  100 இடங்களைக் கொண்ட செனட் அவையில் குடியரசுக் கட்சி 52 இடங்களைப் பெற்றிருக்கிறது. நாடாளுமன்ற அவையிலும் குடியரசுக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.

அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் அமெரிக்க நாட்டின் தலையெழுத்தை மட்டுமின்றி, உலக அரசியல் அரங்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கின்றன என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் மீதான வழக்குகளின் நிலைமை இனி என்னவாகும் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.