கொழும்பு : இலங்கையின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார திசாநாயக்க தலைமையிலான இடது சாரிக் கூட்டணி நேற்று வியாழக்கிழமை (நவம்பர் 14) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று சாதனை படைத்தது.
இதன் மூலம் இலங்கையில் ஊழலை ஒழிப்பதற்கும் மோசமான நிதி நெருக்கடியினால் அரசியல்வாதிகளால் கையாடப்பட்ட சொத்துகளை மீட்கவும் அனுராவுக்கு அபாரமான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
செப்டம்பர் 21-ஆம் தேதி அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே நாடாளுமன்றத்தைக் கலைத்து திடீர் தேர்தலுக்கு 55 வயதான அனுரா உத்தரவிட்டார்.
அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சி மொத்தமுள்ள 225 தொகுதிகளில் 159 தொகுதிகளைக் கைப்பற்றியது.
எதிர்க்கட்சிக் கூட்டணியான சமாகி ஜானா பாலவேகயா (Samagi Jana Balawegaya – SJB) 40 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் சில குடும்பங்களின் கைப்பிடியில் சிக்கியிருந்த இலங்கை அரசியலுக்கு ஜனநாயக ரீதியான விடிவு காலம் பிறந்திருக்கிறது.