கொழும்பு : அதிபராகத் தேர்வு பெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உத்தரவிட்ட அனுர குமார திசநாயக்கா, நாடாளுமன்றத் தேர்தலிலும் அபார வெற்றி பெற்றார்.
அதைத் தொடர்ந்து தனது புதிய அமைச்சரவையை அறிவித்தார். அமைச்சர்கள் நேற்று திங்கட்கிழமை (நவம்பர் 18) பதவியேற்றனர். அனுராவின் அமைச்சரவையில் 2 தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
துணையமைச்சர்கள் பின்னர் நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்காப்பு, நிதி, திட்டமிடுதல், பொருளாதார மேம்பாடு, இலக்கவியல் (டிஜிடல்) பொருளாதாரம் ஆகிய துறைகளை திசநாயக்க தன்வசம் வைத்துக் கொண்டுள்ளார்.
பிரதமராக டாக்டர் ஹரிணி அமரசூரியா நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி, உயர்கல்வி தொழிற்கல்வி ஆகிய துறைகளுக்குப் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழ்ப் பெண்மணியான சரோஜா சாவித்திரி பால்ராஜ் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றொரு தமிழ் அமைச்சரான ராமலிங்கம் சந்திரசேகர் மீன்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.